×

பீகார் மாநிலத்தை பேராசை கண்களால் பார்க்கின்றனர் : எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு

பாட்னா, :பீகாரில் முதற்கட்ட வாக்குபதிவு வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சசாராம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீகார் மாநிலம் சமீபத்தில் இரண்டு மகன்களை இழந்துள்ளது. இறுதி மூச்சு வரை என்னுடன் இருந்தவரும், தனது முழு வாழ்க்கையையும் ஏழை மற்றும் தலித்துகளின் நலனுக்காக அர்ப்பணித்தவருமான ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இதேபோல் ஏழை மக்களுக்காக உழைத்த பாபு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கிற்கும் மரியாதை செலுத்துகிறேன். பீகாரில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை விரைவாக செய்யாமல் இருந்திருந்தால், இந்த தொற்றுநோய் இன்னும் பலரை பலி வாங்கியிருக்கும்.

பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியமைக்கும். ஒரு காலத்தில் பீகாரில் ஆட்சி செய்தவர்கள் மீண்டும் வளர்ந்து வரும் மாநிலத்தை தங்கள் பேராசைக் கண்களால் பார்க்கிறார்கள். ஆனால், மாநிலத்தை பின்தங்கிய நிலைக்கு தள்ளியது யார்? என்பதை பீகார் மக்கள் மறந்துவிடக் கூடாது. பீகாரில் ஐக்கிய  முற்போக்குக் கூட்டணியால் கிட்டதிட்ட 15 ஆண்டுகள் நடந்த  ஆட்சியின் போது அவர்கள் பீகாரை சூறையாடினர். அது மாநிலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் ஊழல் இருந்த காலம். அவர்களை தங்களுக்கு அருகில் நெருங்க விடக்கூடாது என்ற தீர்மானத்தை வாக்காளர்கள் எடுத்துள்ளனர்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இன்னுயிரை இழந்த பீகார் வீரர்களின் பாதம் பணிந்து மரியாதை செலுத்துகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தால் அதை மீண்டும் கொண்டு வருவோம் என்று அவர்கள் (எதிர்க்கட்சி) கூறுகிறார்கள். இதைச் சொன்ன பிறகுகூட அவர்கள் பீகாரில் இருந்து ஓட்டு கேட்க துணிகிறார்கள். இது நாட்டைப் பாதுகாக்க தனது மகன்களையும், மகள்களையும் எல்லைகளுக்கு அனுப்பும் பீகார் மாநிலத்தை அவமதிப்பதாகும். வேளாண் சட்ட விவகாரத்தில் புரோக்கர்களையும், இடைத்தரகர்களையும் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் மண்டி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை சாக்குபோக்காக சொல்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Bihar ,Modi ,attacks , Opposition parties, Prime Minister Modi, attacked
× RELATED இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம்...