பேஸ்புக், டிவிட்டருக்கு சம்மன்

புதுடெல்லி: பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்களின் நிர்வாகிகள் நேரில் ஆஜாகி விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

டிவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் லே பகுதி சீனாவில் உள்ளதாக வரைபடம் வெளியானது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக  டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சிக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் ஷாவ்னே கடும் வார்த்தைகளுடன் எழுதிய கடிதத்தில், ‘லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகராக லே உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர் இரண்டும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். டிவிட்டர் நிறுவனம் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வரைபடத்தில் தவறாக காட்டியது போன்ற, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை அவமதிக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் சட்ட விரோதமானது; அது ஏற்று கொள்ள கூடியதல்ல,’ என கூறப்பட்டுள்ளது. அதேபோல், பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இந்த விவகாரங்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, நாடாளுமன்ற கூட்டுக்குழு நேற்று சம்மன் அனுப்பியது. பேஸ்புக் நிர்வாகிகள் இன்றும், டிவிட்டர் நிர்வாகிகள் வரும் 28ம் தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>