×

மயானம் செல்ல சாலை வசதி இல்லை: வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

மணப்பாறை: துவரங்குறிச்சி அருகே மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், உயிரிழந்தவர்களின் சடலத்தை தண்ணீரிலும், வயல் பகுதிகளிலும் சுமந்து செல்லும் அவலம் நிலவி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே மருதம்பட்டி கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களில் யாரேனும் உயிரிழந்தால், கிராமத்துக்குச் சொந்தமான ஒரு கி.மீ. தொலைவிலுள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு செய்யப்படும். மயானத்துக்குச் செல்ல சாலை வசதியில்லாததால், சடலத்தை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சுமந்து செல்ல வேண்டும். மழைக் காலத்தில் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் நடந்து சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மயானத்துக்கு சாலை வசதி செய்துத்தர வலியுறுத்தி கிராமத்தினர் பலரும், பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அலுவலர்கள் யாரும் இந்த இடத்துக்கு வரவில்லை என்று கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து மருதம்பட்டி கிராம மக்கள் கூறுகையில், கடந்த 19ம் தேதி நல்லம்மாள் (80) என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை மறுநாள் 20ம் தேதி மயானத்துக்குச் சுமந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு நெல் பயிருட்டுள்ள வயலில் இறங்கி நடந்து சென்று மயானத்தை அடைந்தோம். தனியார் பட்டா நிலத்தின் வழியே சடலத்தை சுமந்து செல்ல மிகவும் கஷ்டப்பட வேண்டி உள்ளது. இது குறித்து உரிய அலுவலரிடம் தெரிவித்தும் பயன் இல்லை. விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Tags : cemetery ,field , Road facility, cemetery
× RELATED தொடர் மழையால் ஆரணியாற்றில்...