×

உயர் கல்வி நிறுவனங்களுக்கு புது உத்தரவு: தேசிய கல்வி கொள்கை அமல்படுத்த தயாராகிறது யுஜிசி

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தொடங்கி  உள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வித் துறையில்  சீர்த்திருத்தம் செய்யும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதை அமல்படுத்த மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும், புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.  குறிப்பாக, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

புதிய கல்விக் கொள்கையானது மும்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது. ஆனால் தமிழகத்தில் இருமொழிக் கல்வியையே தொடர வேண்டுமென  கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். மாநில அரசும் இருமொழிக் கல்வியே பின்பற்றப்படும் என கூறி உள்ளது. இதே  போல மேற்கு வங்கத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என மம்தா அரசு கூறியிருக்கிறது. இதற்கிடையே, புதிய கல்விக்  கொள்கையை அமல்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடமும் மத்திய அரசு கருத்து கேட்டு வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,  ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய கால அவகாசம்  வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தற்போது தொடங்கி  உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிர்வாக சீர்த்திருத்த  பணிகளை மேற்கொள்ளுமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைகழகங்கள்,  கல்லூரிகளில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்ததாக பள்ளி கல்வி முறைக்கான உத்தரவுகளும்  வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அனைத்து தரப்பினரின் கருத்துகள்  அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய பள்ளி கல்வித்துறை சார்பில் 13 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* இக்குழு கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்ற சூழலை ஆராய்ந்து ஓராண்டுக்குள் அறிக்கை அளிக்கும் என்றும், அதற்கு முன்பாக  இடைக்கால அறிக்கையை அளிக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
* இதுவரை இக்குழு ஒரே ஒரு ஆய்வுக் கூட்டம் மட்டுமே நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : higher education institutions ,UGC , New order for higher education institutions: UGC prepares to implement national education policy
× RELATED போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை