குளித்தலை அய்யர்மலையில் கிரிவல பாதை அமைப்பு பணி முடியாததால் பக்தர்கள் அவதி

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல 1017 படிகள் ஏறி செல்ல வேண்டும். மேலும் இக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் சித்திரை தேர் திருவிழா 12 நாட்கள் நடைபெறும். கார்த்திகை மாதம் சோமவாரம் சிறப்பாக நடைபெறும். அதுமட்டுமல்லாது மாதாமாதம் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறும். இதையொட்டி பக்தர்கள், பொதுமக்கள், குடி பாட்டுக்காரர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், சுற்றுவட்டாரங்களில் இருந்தும் தினந்தோறும் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் மலை உச்சியில் இருக்கும் ரத்தினகிரீஸ்வரரை வணங்குவதற்கு முன்பு பக்தர்கள் விரதமிருந்து மலையைச் சுற்றி கிரிவலம் வந்து பின்னர் மலை உச்சியில் இருக்கும் ரத்தினகிரீஸ்வரரை தரிசனம் செய்வது புண்ணியம் எனக்கருதி ஒவ்வொருவரும் இக்கோயிலுக்கு வரும் பொழுது கிரிவலம் வருவது வழக்கம். மேலும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை போன்று அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலிலும் கிரிவலம் வந்தால் புண்ணியம் கிட்டும். நினைத்த காரியம் நடக்கும் என கருதி ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த கிரிவலப் பாதை என்பது 4 கிலோமீட்டர் சுற்றளவு உள்ளதாக கூறப்படுகிறது இந்த கிரிவலப் பாதை கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சீரமைக்கப்பட்டு விளக்குகளும் பொருத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமின்றி இரவு பகல் பாராது கிரிவலம் சென்று வந்தனர். தற்பொழுது கிரிவலப்பாதை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கரடுமுரடாக உள்ளது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் கிரிவலப் பாதையை சீரமைக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் சமய இந்து அறநிலையத்துறை நிதி ஒதுக்கீடு செய்து கிரிவலப் பாதையில் தார் சாலை அமைக்க சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தினர்.

இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்து கொண்டார். ஆனால் கிரிவலப் பாதையை தொடங்கி பல மாதங்களாகியும் சாலை செப்பனிடப்படாததால் தற்பொழுது கிரிவலபாதை வழியாக செல்லும் பக்தர்கள் கரடுமுரடாக பாதை இருப்பதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விரைவில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் கிரிவலப் பாதை சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: