×

சித்திரை திருநாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

 

சென்னை, ஏப்.15: சித்திரை திருநாளையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் சித்திரை திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் கோயில்களில் கூட்டம் அலைமோதியது. புகழ்பெற்ற வடபழனி ஆண்டவர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க நாணயக் கவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அஷ்டலட்சுமி, நரசிம்மர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பாரிமுனை கற்பகாம்பாள் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரம், பஞ்சாங்கம் வாசிப்பது நடந்தது.
அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, அதற்கு ஏற்றவாறு கோயில் நிர்வாகம் தடுப்புகள் அமைப்பது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது.

அதுமட்டுமின்றி மலையாள நாட்காட்டியின்படி புத்தாண்டின் தொடக்க நாளாக விஷுவும் நேற்று கேரளாவில், தென் இந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பத்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

The post சித்திரை திருநாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Chitra Thirunala ,Chennai ,Sami ,Chitra Thirunal ,Tamil Nadu ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...