×

மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் மீன்வளர்க்க விடப்பட்ட டெண்டர் 2வது முறை ரத்து? உலக வங்கி நிதியை திருப்பி அனுப்ப முடிவு


கோடிக்கணக்கில் வருவாயை இழக்கும் மீன்வளத்துறை

சென்னை: மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் மீன்வளர்க்க விடப்பட்ட டெண்டர் 2வது முறையாக ரத்து செய்ய மீன்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் தேதியில் மீன்குஞ்சுகளை ஏரி, குளங்களில் விட்டு  வளர்க்கப்படுகிறது. குறிப்பாக,  கெண்டை, கட்லா, ரோகுக் கெண்டை, புல் கெண்டை, மிர்கால் உள்ளிட்ட ரக மீன் குஞ்சுகள் ஏரி, குளங்களில் விட்டு  வளர்க்கப்படுகிறது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் வளர்க்க முடியும். இதற்காக, மீன்வளத்துறை சார்பில்  மீன்குஞ்சுகள் வளர்க்க சர்வதேச அளவில்  டெண்டர் விடப்பட்டன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி  மீன்வளத்துறை சார்பில்  நீர்வளநிலவள திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் 13 மாவட்டங்களில், பொன்னையாறு, தாமிரபரணி, பச்சையாறு, கடனாநதி, சிட்டாறு, கீழ் பாலாறு,  கீழ் கொள்ளிடம், சாத்தையாறு, சிட்டாறு உபவடிநிலங்களில் உள்ள ஏரி, குளங்களில் மீன்பிடிக்க குத்தகைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதில், ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறி டெண்டர் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கடந்த 17ம் ேததி  டெண்டர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதிலும், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டன. இருப்பினும், குறைந்த  ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனத்தை உடனடியாக தேர்வு செய்து இப்பணியை ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை அவ்வாறு  செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, டெண்டரை ரத்து செய்யலாமா என்பது குறித்து மீன்வளத்துறை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே,  கடந்தாண்டும் இது போன்று மீன்குஞ்சுகள் வளர்க்க டெண்டர் விடப்பட்டன. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் கலந்து கொண்டதாக கூறி டெண்டர்  முழுவதும் ரத்து செய்யப்பட்டன. இதனால், உலக வங்கி ஒதுக்கீடு செய்த நிதி பயன்படுத்த முடியாமல் போனது.

அதே போன்று தற்போதும் டெண்டர்  விடாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், தற்போதும் டெண்டர் விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த நிலையில், மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் பட்சத்தில் மீன்வளத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும்.  மாறாக, இந்த டெண்டரை ரத்து செய்தால், உலக வங்கி தரும் நிதி வீணாகும் நிலையில், மீன்வளத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது  என்று மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : cancellation ,state ,districts ,World Bank , 2nd cancellation of tender for fisheries in 13 districts across the state? The World Bank decided to return the funds
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...