×

குளித்தலை ரயில்வேகேட், உழவர் சந்தை அருகில் ஆபத்தான மின் கம்பங்கள்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ளது ரயில்வே கேட் இவ்வழியாக பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல், சேலம், திருச்சி, கரூர் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும், பயணிகள் வாகனங்களும், மேலும் மதுரை, திண்டுக்கல், பழனி, புதுக்கோட்டை, மணப்பாறை மார்க்கத்திலிருந்து வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், கனரக வாகனங்கள் இந்த மணப்பாறை ரயில்வே கேட்டை கடந்து தான் செல்கின்றன. மேலும் அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து விவசாயிகள், தனியார் நிறுவனத்திற்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் இவ்வழியாக செல்கின்றனர். தினந்தோறும் பள்ளி வாகனங்களும் இவ்வழியாகத்தான் சென்று வருகின்றன.

ரயில்வே கேட் அருகில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் கனரக வாகனம் மோதியதில் வளைந்து நிற்கிறது. அதன் பிறகு மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து தனி கவனம் செலுத்தவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் காற்றுடன் மழை பெய்தால் அவ்வழியாக சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தில் இருந்து மின் வயர்கள் அறுந்து விழுந்தாலோ, சரக்கு வாகனங்களின் மேலே அறுந்து விழுந்தாலோ மின் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அதனால் மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வளைந்து கிடைக்கும் மின்கம்பத்தை சரி செய்து தாழ்வான நிலையில் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மின்வாரிய அதிகாரிகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல் குளித்தலை அண்ணாநகர் பகுதியில் உள்ளது உழவர்சந்தை. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். மேலும் காலை நேரங்களில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை எதிரே கலப்பு காலனி இரண்டாவது தெருவில் வீட்டின் அருகே உள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதை மாற்றித் தரும்படி கோரிக்கை வைத்தும் மின் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மின் கம்பத்தையொட்டி கழிவுநீர் சாக்கடை செல்வதால் மழை நேரத்தில் கூடுதலாக தண்ணீர் செல்லும்போது குழந்தைகள், முதியவர்கள் இந்த இடத்தை கடக்கும்போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாயும் அபாய நிலை உள்ளது. எனவே உழவர் சந்தை எதிரே கலப்பு காலனி இரண்டாவது சந்தில் வீட்டின் அருகே உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி தரும்படி மின் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulithalai Railwaygate ,Farmers Market , kulithalai, electric poles
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை