×

முறைகேடுகளை தடுக்க முதலில் 100 மாவட்டங்களில் காஸ் சிலிண்டர் சப்ளைக்கு புதிதாக ஓடிபி எண் முறை: நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது

சேலம்: நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் காஸ் சிலிண்டர் சப்ளைக்கு புதிதாக ஓடிபி எண் முறையை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு கொண்டு வர ஐஓசிஎல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் இந்தியன் ஆயில்,  பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் விநியோகத்தை மேற்கொள்கின்றன. இந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில்  பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காஸ் சிலிண்டர் சப்ளையில் முறைகேடுகளை தவிர்க்க ஐஓசிஎல் நிறுவனம் (இந்தியன் ஆயில்), விநியோக விதிகளில் திருத்தத்தை கொண்டு வரவுள்ளது.

காஸ் சிலிண்டர், சரியான வாடிக்கையாளருக்கு சென்றடையும் வகையில், ஓடிபி எண் பெறும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெயர்களில் சிலிண்டர் புக்கிங் செய்து, வாடிக்கையாளர்களை மாற்றி முறைகேடாக சப்ளை செய்வதை தடுக்க  இந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.  நுகர்வோர் விநியோக அங்கீகார குறியீடு (டிஏசி) என்ற ஓடிபி எண், காஸ் சிலிண்டர் புக்கிங் செய்த வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை சிலிண்டர்  கொண்டு வரும் சப்ளையரிடம் கூறினால்தான், சிலிண்டரை வழங்குவார். இந்த புதிய முறையை சோதனை அடிப்படையில் ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் கோவை, சேலம் மாநகர பகுதியில் ஐஓசிஎல்  நிறுவனம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

 கடந்த ஒரு மாதமாக இந்த முறையில் சிலிண்டர் சப்ளையை மேற்கொண்டுள்ளனர்.  சிலிண்டர் புக்கிங் செய்த வாடிக்கையார்களும், டிஏசி குறியீட்டு எண்ணை சப்ளையர்களிடம் தெரிவித்து, சிலிண்டர்களை வாங்கி வருகின்றனர். இந்த  சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் மாவட்டங்களில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘எல்பிஜி சிலிண்டர்களின் வீட்டு விநியோகம் தொடர்பான விதிகள் நவம்பர்  மாதம் முதல் மாறப்போகின்றன. முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் சிலிண்டர் வழங்க ஒரு முறை  பயன்பாட்டு கடவுச்சொல் (ஓடிபி) வழங்கப்படும். இந்த ஓடிபி, சிலிண்டர் முன்பதிவு செய்தவுடன் அவர்களின் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். டெலிவரி மேனிடம் அதனை கூறினால் தான், சிலிண்டரை வழங்குவார். எரிவாயு சிலிண்டர்,  சரியான வாடிக்கையாளரை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம். நவம்பரில் அமலுக்கு வரும் 100 மாவட்டங்களிலும் வெற்றி கண்ட பின், நாடு முழுவதும் முழுமையாக விரிவுப்படுத்தி அமலுக்கு கொண்டு வரப்படும்,’’ என்றனர்.

தொலைபேசி எண் லிங்க் ஆகாதவர்களுக்கு சிக்கல்

காஸ் சிலிண்டர் ஏஜென்சிகளில் முறையாக தொலைபேசி எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு, இப்புதிய முறையால் சிக்கல் ஏற்படும். அதேபோல், சரியான முறையில் டவர் இல்லாத இடங்களில் ஓடிபி எண் கொண்ட குறுஞ்செய்தி,  தொலைபேசிகளுக்கு சென்றடையாது. அதுவும் சிலிண்டர் சப்ளையில் பிரச்னையை ஏற்படுத்தும். முறைகேடுகளை தவிர்க்க கொண்டு வரப்படும் இத்திட்டம் நல்லது என்றாலும்,சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்று காஸ் ஏஜென்சி  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : districts , New OTP number system for gas cylinder supply in first 100 districts to prevent irregularities: Effective from November
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...