×

கொரோனாவால் வேலை கிடைக்காததால் நத்தை வேட்டைக்கு மாறிய தொழிலாளர்கள்: பேராவூரணியில் விற்பனை படுஜோர்

பேராவூரணி: கொரோனாவால் வேலை கிடைக்காததால் கூலி தொழிலாளர்கள் பிழைப்புக்காக நத்தை வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் பேராவூரணியில் நத்தை விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு காவிரிகிளை வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. பருவமழையும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத நிலையில் விவசாய பணிகள் சரிவர நடக்கவில்லை. இதனால் கூலி தொழிலாளர்கள் பல்வேறு பிழைப்புகளை தேடி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்றங்கரை, குளக்கரை, வயல்வெளியில் உலவும் நத்தைகளை பிடித்து விற்பனை செய்து விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இரவு முதல் அதிகாலை வரை டார்ச்லைட் வெளிச்சத்தின் உதவியுடன் இரவு நேரங்களில் சாக்கு பையில் நத்தைகளை சேகரிக்கின்றனர். பின்னர் காலை 7மணி முதல் கடைவீதி, ஒயின் ஷாப் வாசல், சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நத்தைகளை சிறு சிறு கூறுகளாக கட்டி ஒரு கூறு ரூ.50க்கு விற்பனை செய்கின்றனர். சுவையுடன் விலையும் குறைவாக உள்ளதால் அசைவ பிரியர்கள் இவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் மூலநோய்க்கு சிறந்த உணவு என்பதாலும் விரும்பி வாங்குகின்றனர். பேராவூரணி சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, பூக்கொல்லை என பல இடங்களில் சாலையோரத்தில் நத்தை விற்பனையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நத்தை வியாபாரம் செய்யும் தொழிலாளி கலியமூர்த்தி கூறியதாவது: விவசாய பணிகள் அதிகளவு இல்லாத நிலையில் நத்தைகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம். நத்தைக்கறி சுவையாக இருக்கும். விலையும் மலிவானது என்பதால் அசைவப்பிரியர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். நீர்நிலைகள், கரையோரத்தில் ஒதுங்கும் நத்தைகளை சேகரித்து வருவோம். பாம்புக்கடி, விஷ பூச்சிக்கடி, மதுப்பிரியர்கள் உடைத்து வீசி செல்லும் மதுபாட்டில்களால் ஏற்படும் காயம் ஆகியவற்றை கடந்து தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது என்றார்.

Tags : Corona ,Peravurani , Corona, work, snail hunting
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!