×

அடுத்த சீசனுக்கும் இடத்தை பிடிச்சுட்டேன்...: கிறிஸ் கேல் உற்சாகம்

ஷார்ஜா: பஞ்சாப் அணியின் முக்கிய ஆட்டக்காரரான கிறிஸ் கேல் உடல்நல பாதிப்பு காரணமாக முதல் 7 போட்டிகளில் களம் காணவில்லை. அதிரடி ஆட்டக்காரரான அவர் ஆடாதது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது. அதுமட்டுமல்ல தொடர் தோல்வியில்  சிக்கித் தவித்த பஞ்சாப் அணிக்கு கேல் வந்தால் நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ‘ஆடாமல் சும்மா உட்கார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை’ என்று ஏற்கனவே கேல் கூறியிருந்தார். இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான 8வது போட்டியில் களம் கண்டார்.டாஸ்  வென்று பேட் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. கோஹ்லி 48 ரன் எடுக்க, கடைசி 2.1 ஓவரில் கிறிஸ் மோரிஸ், இசுரு உடனா இணை 35 ரன் குவித்தது. பஞ்சாப் தரப்பில் முருகன் அஸ்வின், முகமது ஷமி தலா 2, அர்ஷ்தீப், ஜார்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் கேப்டன் ராகுல் ஆட்டமிழக்காமல் 61 ரன் (49 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்),  மயங்க் 45, கேல் 53 ரன் குவித்தனர்.  ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.  பந்துவீச்சில் அசத்திய முருகன் அஸ்வின் அல்லது அரை சதம் விளாசிய கிறிஸ் கேலுக்கு இந்த விருது கிடைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதிலும், 41வயதிலும் அசத்திய கேல் அதற்கு பொருத்தமாகவே இருந்திருப்பார். அவர் தனது முதல் போட்டியிலேயே 45 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசி 53 ரன் குவித்தார். கூடவே பஞ்சாப் அணியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெற்றியை பார்த்தது.

போட்டிக்கு பிறகு பேசிய கேல், ‘நிச்சயமாக எனக்கு பதட்டமாக இல்லை. யுனிவர்சல் பாஸ் நான், எனக்கு எப்படி பதட்டம் வரும். மற்றவர்களுக்கு தான் மாரடைப்பை ஏற்படுத்துவேன். முதல் ஆட்டத்திலேயே நல்ல விஷயம் நடந்திருக்கிறது. வரும் 2021 ஐபிஎல் போட்டிக்கும் எனக்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறேன். களம் ஈரமாக இருப்பதால் பந்து மெதுவாகதான் நகர்கிறது. எனவே 2வதாக பேட்டிங் செய்வது நல்லது. அணியில் என்னை 3வதாக விளையாட சொன்னார்கள். அது ஒன்றும் பிரச்னையில்லை. தொடக்க வீரர்களான மயங்க், கேப்டன் இருவரும் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அணிக்கு வெற்றிதான் முக்கியம். எனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறேன். எப்போதும் ஒன்றை செல்வேன் பெயருக்கு மரியாதை கொடுங்கள் (அவரது பேட்டில் உள்ள பெயரை சுட்டிக் காட்டுகிறார்). அவ்வளவுதான்’ என்றார்.



Tags : season , I took the place for next season ...: Chris Gale Excitement
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி