×

சொப்னாவின் கூட்டாளிக்கு தாவூத் கும்பலுடன் தொடர்பு: போட்டோ ஆதாரத்துடன் என்ஐஏ விளக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னாவின் கூட்டாளி ரமீசுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தேசிய புலனாய்வு  முகமை (என்ஐஏ) ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலமாக நடந்த  தங்கம் கடத்தல் வழக்கில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்  10 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, என்ஐஏ சார்பில் ஆஜரான வக்கீல்  அர்ஜுன் கூறியது: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  முக்கிய நபர்களில் ஒருவரான ரமீசுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு  உள்ளது.

தற்போது, இவருக்கு சர்வதேச கடத்தல்  கும்பல் தலைவனான தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் தொடர்பு இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தாவூத் இப்ராகிமின் டி கம்பெனி தான்சானியாவை  மையமாக வைத்து, தங்கம், போதை பொருள், ஆயுதம், ரத்தினம் போன்றவற்றை கடத்துகிறது. ரமீஸ் பலமுறை தான்சானியா சென்று தாவூத் இப்ராகிம் கும்பலை சந்தித்துள்ளார்.  தான்சானியாவில் உள்ள ஒரு ரகசிய  இடத்தில் துப்பாக்கியுடன் இருக்கும்  ரமீசின் புகைப்படம் கிடைத்துள்ளது.  இந்தியாவுக்கு ரத்தினங்களை கடத்துவதற்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன்  ஒப்பந்தம் செய்வதற்காக அவர் முயற்சித்துள்ளார். ஆனால், அது பலன் அளிக்கவில்லை.

மேலும், சொப்னாவின் செல்போனில் மலேசியாவில்  இருக்கும் சர்ச்சை பேச்சாளர் ஜாகீர் நாயக்கின் புகைப்படங்களும், கைது  செய்யப்பட்டுள்ள மற்றவர்களிடம் இருந்து தீவிரவாத செயல்களில்  தொடர்புடையவர்களின் புகைப்படங்களும்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சொப்னா உள்பட 40க்கும் மேற்பட்டவர்களிடம்  இருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட 99 உபகரணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், பல தகவல்களை அவர்கள் அழித்து விட்டனர். இருப்பினும், அவற்றை மீண்டும் எடுப்பதற்காக  தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதில்  22 உபகரணங்களின் பரிசோதனை முடிவு மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற பொருட்களின்  முடிவும் கிடைத்தால்தான் இந்த கும்பலின் நடவடிக்கை குறித்த முழு விவரமும்  தெரியவரும். இந்த கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் மிக  தீவிரமாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழக்கக்  கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

10 பேருக்கு ஜாமீன்
தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த 15 பேரில், முகம்மது ஷாபி, முகம்மது அலி, சரபுதீன் ஆகிய 3 பேரை தவிர 10 பேருக்கு ஜாமீன் வழங்கி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு எதிராக உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று என்ஐஏ சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி கிருஷ்ணகுமார் 3 பேர் தவிர மீதி 10 பேருக்கு ஜாமீன் வழங்கினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா சுரேஷ், சரித்குமார் ஆகியோர் தங்கள் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

சிவசங்கரை கைது செய்ய 23ம் தேதி வரை தடை
தங்கம்  கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், கேரள முன்னாள் ஐஏஎஸ்  அதிகாரி சிவசங்கர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். இந்த மனு நீதிபதி அசோக் மேனன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு  வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க அமலாக்கத் துறை வழக்கறிஞர் அவகாசம் கோரியதால், வரும் 23ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

துப்பாக்கிகளும் கடத்தல்
என்ஐஏ வழக்கறிஞர் தனது வாதத்தில் மேலும், ‘‘கொச்சி வழியாகவும் ரமீஸ் பலமுறை தங்கத்தை கடத்தியுள்ளார். அவற்றுடன் துப்பாக்கிகளையும் கடத்தி வந்துள்ளார். கடந்தாண்டு நவம்பரில் 19  துப்பாக்கிகளை கேரளாவுக்கு கொண்டு வந்துள்ளார். தங்கம் கடத்தல் மூலம்  கிடைக்கும் லாப பணத்தை இக்கும்பல் சொந்த தேவைக்கு பயன்படுத்துவது கிடையாது.  அதை பணத்தை மீண்டும் தங்கம் கடத்துவதற்கே முதலீடு செய்துள்ளனர்,’’ என்றார்.

Tags : Sopna ,associate ,gang ,Dawood ,NIA , Sopna's associate linked to Dawood gang: NIA explanation with photo source
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை