×

கனரக வாகன தகுதி சான்று புதுப்பிக்க உதிரிபாகங்கள் வாங்கும் புதிய விதிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கனரக வாகனங்களுக்கான தகுதி சான்று புதுப்பிக்க குறிப்பிட்ட நிறுவனத்திடம் உதிரி பாகங்களை வாங்கி அதற்கான  சான்று பெற வேண்டும் என்ற புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் முருகன் வெங்கடாச்சலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றை புதுப்பிக்கும் போது, ஒளி விளக்கு, பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களை ஓசூரை சேர்ந்த 3எம் இண்டியா பிரைவேட் லிமிடெட், மற்றும் ஷிப்பி ரீட்டைல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும்.  

உதிரி பாகங்கள் வாங்கி அந்த நிறுவனத்திடம் அதற்கான சான்று பெற வேண்டும் என்ற போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவு மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக போக்குவரத்து ஆணையர், 3எம் இண்டியா (பி) லிமிடெட், ஷிப்பி ரிடைல் டிரேடிங் (பி) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : High Court , Prohibition of New Rule on Purchase of Parts to Renew Heavy Vehicle Eligibility Certificate: High Court Order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...