×

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்யுங்கள் : திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை,:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட மத்திய அரசு பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவிகிதம், எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாறாக, இந்த இட ஒதுக்கீடு அளவை குறைத்து, முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை அளித்து, வங்கி பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று இருக்கிறது.

முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவிகித ஒதுக்கீட்டை கொண்டு வந்தபோது, ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டு பிரிவினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு சொன்னது. நடைமுறையில் உள்ள 50 சதவிகிதத்துக்கு கூடுதலாகவே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தது. அதற்கு மாறாக, தற்போது வங்கி அதிகாரிகளுக்கான தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் அளவை குறைத்து, முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்து சட்டவிரோதமாக தேர்வு நடத்தியவர்கள்மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Tags : Bank officials ,Thirumavalavan ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு