×

வேளாண் சட்ட சர்ச்சை பற்றி பேச்சு மத்திய அமைச்சர் வராததால் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசின் அழைப்பை ஏற்று, வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய அமைப்பினர், மத்திய அமைச்சர் வராததால் கூட்டத்தை புறக்கணித்தனர். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உள்ளூர் மண்டிகளைத் தாண்டி நாட்டின் எந்த பகுதிக்கும் விற்பனை செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, பஞ்சாப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

மிகப்பெரிய அமைப்பான பாரதிய கிசான் யூனியன் முதலில் கூட்டத்தில் பங்கேற்க சம்மதிக்காத நிலையில், அந்த அமைப்பும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதித்தது. இதன்படி, டெல்லியில் மத்திய வேளாண் அமைச்சக அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சென்றபோது அங்கு வேளாண் அமைச்சக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வராததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், அங்கேயே வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு, தங்களின் போராட்டம் இனியும் தொடரும் என்றும் அவர்கள் கண்டிப்புடன் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

* பஞ்சாப் பதில் சட்டம்: 19ல் பேரவை கூடுகிறது
புதிய வேளாண் சட்டங்களை முடக்கும் விதமாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பதில் சட்டம் நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் பதில் சட்டம் நிறைவேற்ற வரும் 19ம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்த அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. இதற்கு ஆளுநரும் அனுமதி அளித்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப் பேரவையில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : Union Minister , Protest over non-arrival of Union Minister to talk about agricultural law controversy
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...