×

சட்டமன்ற தேர்தல் வரை கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்குபதிவு: கன்னியாகுமரி தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிதிப்படி ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். எனவே வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, வி.வி.பேட் மற்றும் ஈ.வி.எம் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்த ஆணையம் தயாராக உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரை கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பீகார் தேர்தலில் கடைபிடிக்கப்படும் பல நடைமுறைகளை தமிழகத்திலும் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 3 சதவீதம் பேர் தமிழகத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ம் தேதி வெளியிடப்படவுள்ளது.  வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் வரும் 3ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : voting ,voters ,Election ,elections ,corona exposure ,Assembly ,constituency ,Kanyakumari , Postal voting for voters over 80 years of age in case of corona vulnerability till Assembly elections: Election to Kanyakumari constituency by February; Chief Electoral Officer Information
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...