தேவகோட்டை அருகே அலங்கோலமாக கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலைய சாலை

தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெங்களூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை சேறும், சகதியுமாக கிடப்பதால் வாகனங்களில் வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தேவகோட்டையில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது வெங்களூர் கிராமம். கண்ணங்குடி யூனியனுக்கு உட்பட்ட இவ்வூரில் கடந்த ஜனவரி மாதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இங்கு 2 டாக்டர்கள், ஒரு செவிலியர், ஒரு லேப் டெக்னீசியன், 6 கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிகின்றனர். வெங்களூர், சாத்தமங்கலம், நடுவிக்குடி, தேர்போகி, களத்தூர், கும்மங்குடி பகுதிகளில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் வருகின்றனர். மருத்துவமனை அமைந்திருக்கும் இடம் தார் சாலையில் இருந்து 15 அடி பள்ளத்தாக்கில் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் மருத்துவமனை வரும் வழி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் வாகனங்களில் வரவே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் மக்கள் பயமின்றி மருத்துவமனை சென்று வர சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அழியாபதி முத்துக்குமார் கூறுகையில், ‘மருத்துவமனைக்கு பயந்து கொண்டே வர வேண்டியிருக்கிறது. போக்குவரத்திற்கு ஒரே ஒரு பஸ் மட்டும்தான் வருகிறது. எனவே மக்கள் சிரமத்தை போக்க மருத்துவமனைக்கு சாலை வசதியை மேம்படுத்துவதுடன், கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

More