×

பல்கலையின் உயர் புகழ் தகுதி பெறும் விவகாரம் தமிழக அரசின் ஒப்புதலுடனே கடிதம் அனுப்பினேன்: அண்ணா பல்கலை துணைவேந்தர் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் புகழ் தகுதி  பெற்ற நிறுவனமாக அறிவிக்க தேவையான நிதியை பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. சூரப்பா, மாநில அரசுடன் கலந்தாய்வு செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நேற்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக உயர்கல்வி துறையின் ஒப்புதலுடனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. 69% இடஒதுக்கீடு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அரசின் கோரிக்கையையும் கடிதத்ததில் பதிவு செய்தேன். மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த உயர்புகழ் தகுதிக்கு தேர்வாகும் பட்சத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச தரத்திலான கல்வியை வழங்குவதும் சாத்தியமாகும். மேலும் தமிழக அரசின் நிதி பற்றாக்குறையின் காரணமாக தான் பல்கலைக்கழகத்தின் சொந்த ஆதாரங்களில் இருந்து 5 ஆண்டுகளில் ஆயிரத்து 570 கோடி நிதியை  திரட்டிக் கொள்ள முடியும் என்றும் கூறினேன். இவ்வாறு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். ஆனால் பல்கலைகழக நிதி ஆதாரங்களில் இருந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் அதை ஈடு செய்ய கல்வி, தேர்வு கட்டணங்கள் உயர்த்த வேண்டியிருக்கும். இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags : Government of Tamil Nadu ,Anna University , I have sent a letter with the approval of the Government of Tamil Nadu on the matter of qualifying for the High Reputation of the University: Anna University Vice-Chancellor
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...