×

ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் அவலம்: திட்டை-தாராசுரம் சாலையை தரமானதாக அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சை: தஞ்சையை அடுத்த திட்டை-தாராசுரம் சாலையை தரமானதாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்கு செல்பவர்கள், அய்யம்பேட்டை, பாபநாசம் வழியாக சென்றால், சாலைகள் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசலாக இருப்பதாலும், அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், பைக், கார், லாரிகள் என அனைத்தும், தாராசுரம், திருக்கரூகாவூர், மெலட்டூர், அன்னப்பன்பேட்டை, திட்டை வழியாக தஞ்சைக்கு வருவார்கள்.மேலும் இச்சாலையில், ஏராளமான கிராமங்களும், புராதனசின்னங்களும், பரிகார மற்றும் நவக்கிரககோயில்கள் இருப்பதால், வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தஞ்சைக்கு நான்கு வழி பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு திட்டை அடுத்த அன்னப்பன்பேட்டை கிராமத்தின் குறுக்கே பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக லாரி மற்றும் கனரக வாகனங்களில், மண், மணல் உள்ளிட்ட ராட்சத வாகனங்களில் கட்டுமான பொருட்களை செல்லப்படுகிறது. இதனால், திட்டை- நெய்தலுார் சாலையில் தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்தும், ராட்ஷத பள்ளங்களாக காட்சியளிக்கின்றன.மேலும், வாய்க்கால் பாலத்தின் ஒரத்திலுள்ள சாலைகள் பெயர்ந்து பள்ளம் விழுந்துள்ளதால், பாலத்தின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. இதே போல், மற்றொரு வாய்க்கால் செல்லும் பகுதியில்,சாலையின் நடுவில் உள்வாங்கியிருப்பதால், வாகன ஒட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், திட்டை-அன்னப்பன்பேட்டை நெய்தலுார் சாலையை, தரமானதாக அமைக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அச்சாலை துண்டிக்கும் நிலை உருவாகும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், தஞ்சையை அடுத்த திட்டை-தாராசுரம் சாலையை, வாகன போக்குவரத்துக்காக ரூ. 1 கோடி மதிப்பில் கடந்த 2019ம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது. பின்னர் பிரதான சாலையாக தஞ்சை- கும்பகோணம் செல்வதற்கு திட்டை, திருக்கருகாவூர் சாலையை அனைத்து வாகன ஒட்டிகளும் பயன்படுத்த தொடங்கினர். திட்டை-நெய்தலூர் கிராமத்திற்கு இடையில், வாய்க்கால் பாலப்பகுதியில், தரமான சாலைகள் அமைக்காததால், சுமார் 1 கிமீ தூரத்திற்கு சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்தும், சாலை மற்றும் வாய்க்கால் பகுதிகள் ஒரு புறமாக உள்வாங்கி ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றது.

இது போன்ற ஆபத்தான நிலையிலுள்ள சாலையால்,தினந்தோறும் வாகன ஒட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வருபவர்களுக்கு சாலையிலுள்ள ஜல்லிகள், பள்ளங்களும் தெரியாமல் செல்வதால், விபத்து ஏற்பட்டு, பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் திட்டை-நெய்தலுார் இடையிலுள்ள ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும், தவறும் பட்சத்தில் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : road ,Thittai-Tarasuram , Road, villagers, demand
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி