×

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியில் கோட்டை அகழி தூர்வாரும் பணி 90 சதவீதம் நிறைவு

வேலூர்: வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.32 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை அகழியில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவுடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் உள்ள தரைக்கோட்டைகளில் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோட்டையாக வேலூர் கோட்டை விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையில் பல்வேறு கலை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த கோட்டையை மேலும் அழகுறச்செய்வது, அகழிதான். இந்த அகழியினை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.32 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை தூர்வாரி அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 7 நவீன மிதவை இயந்திரங்கள் மூலம் கோட்டை அகழியை தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரியார் பூங்கா பகுதியில் உள்ள சுமார் 500 மீட்டர் தூரம், 60 மீட்டர் அகலத்தில் உள்ள பகுதி தூர்வாரிய பிறகும் அப்பகுதி மட்டும் சற்றே உயரமாக இருந்து. இதனால் கோட்டையை சுற்றி படகு சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவுரையின் பேரில் தற்போது, உயரமாக உள்ள அந்த பகுதிகளில் தூர்வாரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுமார் 90 சதவீதத்துக்கு மேலாக தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணிகளும், இம்மாத இறுதிக்குகள் முடிவடைய உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அகழியில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் படகு சவாரி இயக்கப்படுமா? என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அகழி தூர்வாரும் பணி மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகழியின் குறுக்கே பைப் லைன் உள்ளது. அதோடு நீர்மட்டமும் குறைவாக உள்ளதால் தற்போதைய நிலையில் படகு சவாரி இயக்க முடியாது. நீர்மட்டம் உயர்ந்தால் மட்டும் படகு சவாரி இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டத்தில் படகு சவாரி செய்வதற்கு என்றோ மக்கள் பொழுதுபோக்குவதற்காக என்றோ தனியாக எந்தவொரு சுற்றுலா தலமும் இல்லை. வேலூர் கோட்டை அகழி தூர்வாரும் பணி முடிந்து, படகு சவாரி விட்டால், பொழுதுபோக்கு அம்சமாக மாறுவதுடன் சிறந்த சுற்றுலா தலமாகவும் இடம்பெறும். ஆனால் கோட்டை பெரியார் பூங்கா அருகே, அகழியின் குறுக்கே நீள சுண்ணாம்பு பைப் அமைந்துள்ளது. இது எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. பயனற்ற நிலையில் உள்ள அந்த பைப்பை விட நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே படகுசவாரி செய்ய முடியும். தற்போதுள்ள நீர்மட்டத்தில் படகு சவாரி செய்து கோட்டையை சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோட்டையில் தூர்வாரும் பணியினை விரைந்து முடித்து படகுசவாரிக்கு இடையூறாக அகழியின் குறுக்கே இருக்கும் சுவரை அகற்றி அகழியில் ஏற்கனவே இயங்கியதுபோல் படகுசவாரி விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

படகுகளை பராமரிப்பதில் பிரச்னை

வேலூர் கோட்டை அகழியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10க்கும் மேற்பட்ட துடுப்பு மற்றும் பெடல் படகுகள் மூலம் படகுசவாரி இயக்கப்பட்டது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் சுற்றுலா துறைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. பின்னர் படகு சவாரியை சுற்றுலா துறை மூலம் பராமரிக்க முடியாமல் மாநகராட்சி வசம் ஒப்படைத்தனர். அவர்களும் சரிவர பராமரிக்காமல் விட்டதால் படகுசவாரி முடங்கியது. அதோடு அனைத்து படகுகளும் நாசமாகி விட்டது.

Tags : fort ,Vellore Corporation Smart City , Vellore, fort, moat
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...