×

கொரோனாவை கண்டறிய பெலுடா பேப்பர் சோதனை

புதுடெல்லி: ‘கொரோனாவை கண்டறியும் பெலுடா சோதனை, அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வரும்,’ என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.  சமூக வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடம் உரையாடிய போது, இதை அவர் தெரிவித்தார்.


தடுப்பூசி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ‘‘தடுப்பூசியின் பாதுகாப்பு, வீரியத்தைக் கருத்தில் கொண்டே , அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். நோயாளிகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், தடுப்பூசி முழுமையாக  தயாரானாலும், அதை அவசர கால தடுப்பூசியாக பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், தடுப்பூசியை முதலில் யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்படுவது  இயல்பானது,’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘குறைவான கட்டணத்தில் விரைவாக கொரோனாவை கண்டறிய, ‘பெலுடா பேப்பர் பரிசோதனை’ முறை உதவுவதாக நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பிசிஆர் சோதனையை போலவே,  இதிலும் மாதிரிகள் எடுக்கப்படும். ஆனால், 30 நிமிடங்களில் மிக துல்லியமான முடிவுகளை இது கொடுக்கும். இந்த பெலுடா பரிசோதனை, அடுத்த சில வாரங்களில் அமலுக்கு வரும்,’’ என்றார்.

உயிரிழப்பு குறைந்தது

கொரோனாவால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில் அதிகளவில்  குணமடையும் நாடாக இந்தியா உள்ளது.

 70 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 70 லட்சத்து 53 ஆயிரத்து 806 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் புதிதாக 74,383 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  பலியானவர்கள் எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று முன்தினம் புதிதாக 918 பேர் இறந்துள்ளனர். இதுவரை 60 லட்சம் பேர் குணமாகி உள்ளனர். தற்போது 9 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Beluda paper test to detect corona
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...