×

அணையில் இருந்து வெளியேறிய நீரால் அரிப்பு பாலம் சீரமைப்பு பணி தீவிரம்

மஞ்சூர்: குந்தா அணையில் இருந்து வெளியேறிய நீரால் பாலத்தின் துான் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று அமைந்துள்ளது. மஞ்சூர் ஊட்டி மற்றும் குன்னுார் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பாலம் மிகவும் பழமையானது. மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பால் குந்தா அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த பாலத்தின் அடியில் செல்கிறது. இந்நிலையில் மழை மற்றும் குந்தா அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பாலத்தை தாங்கி நிற்கும் தூண் ஒன்றின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் பாலம் பலம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூணின் அடிப்பகுதியில் பாதிப்பு ஏற்படாத வகையில் மண் அரிப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை சிமென்ட் கலவை கொண்டு அடைத்து வருவதாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டு இப்பகுதியில் பெய்த கன மழையில் இப்பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள், கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் குந்தா அணை நிரம்பியதால் பலமுறை அணை திறந்து விடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அப்போது பாலத்தை ஒட்டி கட்டப்பட்டிருந்த கரையோர தடுப்புச்சுவரின் அடிப்பாகத்தில் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 மீட்டர் துாரத்திற்கு தடுப்புச்சுவரில் கற்கள் பெயர்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் போர்கால அடிப்படையில் தடுப்புச்சுவர் சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : dam , Dam, outfall, water erosion bridge, renovation work
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...