×

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தாமதமின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்க : மக்கள் நீதி மய்யம்!!

சென்னை : மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரது 12வயது சிறுமியை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து, உடலில் மின்சாரம் பாய்ச்சி, மார்பகத்தை கடித்து குதறி கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டிய காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி ஆவணங்களை சமர்ப்பிக்காமல் மெத்தனமாக நடந்து கொண்ட காரணத்தால் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த அவ்வழக்கின் குற்றவாளி மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டிருப்பது காவல்துறை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருவதும், அக்கொடுமையில் ஈடுபடும் கயவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர், ஆளுங்கட்சியினரும், மேல்தட்டு வர்க்கத்தினர் தரும் நெருக்கடி காரணமாக மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையும், நீதித்துறையும் நமக்கு நீதியை பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கையோடு இருக்கும் ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் தகர்த்தெறியப்பட்டு வருவது வேதனைக்குரியது.

நாடு முழுவதும் இது வரை நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர அரசு தரப்பும், காவல்துறை தரப்பும் தவறியதால் குற்றத்தை நிருபிக்க முடியாமல் போவது அதிகரித்திருக்கிறது.

விளைவு குற்றமிழைப்பவர்களின் எண்ணிக்கையும், பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

எனவே இனியாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த சிபிசிஐடி போன்று காவல்துறையில் தனி பிரிவை உருவாக்க தமிழக அரசு முன் வர வேண்டும்

அத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வெங்கடாசலம் அவர்களின் மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் அவ்வழக்கில் தமிழக அரசு தாமதமின்றி மேல்முறையீடு செய்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரும் வகையில் வழக்கினை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ஆதி திராவிட நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தாமதமின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Government of Tamil Nadu ,People's Justice Center , People, Government of Tamil Nadu, People's Justice Center
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...