×

உள்ளூர் தலித் தலைவர் கொலை வழக்கு : ‘என்னை கைது செய்யுங்கள் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்’; நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் சவால்

பாட்னா:‘தலித் தலைவர் கொலை வழக்கில் என் மீது குற்றம் சாட்டியுள்ள நீங்கள் என்னை கைது செய்யுங்கள் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் சவால் விட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக். அக்கட்சியில் இருந்து விலகி, சுயேச்சையாக சட்டமன்றத் தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் நிற்கப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் எம்எல்ஏ தேர்தலில் சீட் வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னிடம் கேட்டார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் புர்னியாவில் உள்ள அவரது வீட்டிற்கு பைக்கில் வந்த 3 பேர், துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.   தனது கணவர் கொலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று சக்தி மாலிக்கின் மனைவி குஷ்பு தேவி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரர் பிரதாப் யாதவ் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இருப்பினும் போலீஸ் எஸ்.பி விகாஸ் சர்மா கூறுகையில், ‘இக்கொலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்களுக்கு தொடர்பு உள்ளதாக இதுவரை எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இக்கொலை தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை தனது கடமையை முறையாக செய்து வருகிறது. விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

‘37 வயதான சக்தி மாலிக், அதிக வட்டிக்கு கடன் தரும் தொழிலில் கொடி கட்டி பறந்தவர். அசல் மற்றும் அநியாய வட்டியை அடியாட்களின் துணையுடன் மிரட்டியே வசூல் செய்து, பெரும்பாலான மக்களின் கோபத்திற்கு ஆளானவர். இதனால் அவர் மீது பலருக்கு விரோதம் உள்ளது. இதுதான் இந்த கொலைக்கு காரணம்’ என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் கொலையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரர் பிரதாப் யாதவுக்கு தொடர்பு உள்ளது என்று முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. உங்களிடம் ஆதாரம் இருந்தால் ஒன்று என்னை கைது செய்யுங்கள். அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள். அதை விடுத்து தேர்தல் ஆதாயத்திற்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள்.உள்துறை உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நினைத்தால் என்னை கைது செய்யலாம். நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னரே நீங்கள் என்னை கைது செய்யலாம். ஆனால் சட்டத்தின் துணையுடன் இதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : CBI ,Tejaswi Yadav ,Nitish Kumar , Local, Dalit leader, murder, case, Nitish Kumar, Tejaswi Yadav, challenge
× RELATED 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த...