×

வாழிடங்கள் அழிந்து வருவதன் எதிரொலி குமரியில் வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்தது-சூழியல் சுற்றுலா மையங்களாக அறிவிக்க வலியுறுத்தல்

நாகர்கோவில் : வாழிடங்கள் அழிந்து வருவதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து இந்த ஆண்டு குறைந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் வாரம் ஆண்டுதோறும் 100க்கும் அதிகமான வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து பிப்ரவரி அல்லது மார்ச் இறுதியில் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவது வழக்கம். மேலை நாடுகளில் இலையுதிர்காலம், பனிக்காலம் துவங்கிய உடன் கடுங்குளிர் வாட்டுவதுடன், நீர் பனிக்கட்டியாக மாறுவதால் உணவு இல்லாமல் பறவைகள் திண்டாடும் பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இதனால் ஆசிய நாடுகளில் பறவைகள் வருவதுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான தட்பவெப்பநிலை இருப்பதால் பல பறவை இனங்கள் குமரி மாவட்டத்தை நம்பி வருகின்றன.

குமரி மாவட்டத்தில் உப்பளங்கள், சுசீந்திரம், தேரூர் பகுதியில் உள்ள குளங்கள், மணக்குடி பகுதியில் உள்ள காயல் பகுதிகளில் வலம் வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு, பாதுகாப்பு, மக்கள் தலையீடு இல்லாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் பறவைகள் அதிக எண்ணிக்கை வருகை தருவது வழக்கம். ஆனால் அண்மை காலங்களில் பறவைகளின் வரத்து மிக குறைந்ததுடன் இந்த ஆண்டு ஒரு சில பறவை இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பின் போது 3 ஆயிரம் பறவைகளுக்கு உட்பட்ட எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளை எண்ண முடிந்தது.

பறவைகள் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. தேரூர், சுசீந்திரம், மாணிக்கபுத்தேரிகுளம், தத்தையார்குளம் ஆகியவற்றில் தாமரை பயிரிடுவதால் பறவைகளின் உணவு கிடைக்கும் இடங்கள் குறைந்துள்ளன. ஆகாயத்தாமரை, சங்கிலி பாசி மற்றும் தாவரங்கள் நீர்பகுதிகளை ஆக்ரமிப்பு செய்துள்ளன. இக்குளங்களில் பல ஆண்டுகளாக வண்டல் மண் அகற்றப்படாமல் இருப்பதால் குளங்கள் முழுவதும் மண் மேடுகளாக இருக்கின்றன. இந்தநிலையில் வாத்து இனங்கள் வந்து இறங்கி தேவையான மீன் உணவை பிடித்து உண்பதற்கு இடம் அறவே இல்லாமல் போய்விட்டது என்று பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க உறுப்பினர் டேவிட்சன் கூறியதாவது: பறவைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுவதால் பறவைகள் வருவது குறைவதுடன் அவை குமரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்து வேறு இடங்களுக்கு சென்றுவிடுகின்றன. மணக்குடி பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் பூநாரை பறவைகளுக்கு தேவையான உணவு கிடைக்க வில்லை. செப்டம்பர் இறுதி வாரத்தில் வந்த பறவைகள் உணவில்லாமல் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து விட்டன. அதுபோன்று உள்ளான் இனங்கள், மணல் கொத்திகள், கூழக்கடா, வண்ணநாரை, கொக்கு இனங்கள், வாத்து இனங்களும் காணப்பட வில்லை.

பறவைகள் நமது பாரம்பரிய சூழல் சொத்துகள். ஒவ்வொரு ஆண்டும் நமது அழையா விருந்தாளிகளாக வரும் பறவைகள், நமது நாட்டு பறவைகள் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்கின்ற புழுக்கள் பூச்சிகளை அழித்து விவசாயிகளின் நண்பனாக திகழ்கின்றன. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் பலர் இப்பறவைகளை பார்வையிட நீர்நிலைகளுக்கு செல்கின்றனர். வெளிநாட்டினர் ஆய்வுக்காகவும், பறவைகளை பார்த்து அவற்றின் அழகை ரசிக்கவும் வருகின்றனர். இப்பறவைகளின் வாழிடங்களை சூழியல் சுற்றுலா மையங்களாக அறிவித்து அரசு இந்த இடங்களை வளர்ச்சி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் தோழன்

விவசாயிகளின் நண்பன் ஆன இந்த பறவை இனங்கள், பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சி இனங்களை இரையாக கொள்வதுடன், இவற்றின் எச்சம் சிறந்த இயற்கை உரமாக விளங்குகிறது. பறவைகள் அதிகம் இருக்கும் இடம் செழுமையான பகுதியாக அடையாளம் காணப்படுகிறது. குமரிக்கு சுமார் 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் வருகின்றன. 3 நாட்கள் முதல் ஒருவாரத்திற்குள் இந்த பறவைகள் கண்டம் விட்டு கண்டம் வருகின்றன. இதுபோன்ற பறவை இனங்கள் வேட்டையாடப்படுவதுடன், தாமரை வளர்ப்பவர்களாலும் இன்னலுக்கு ஆளாகின்றன.

இதனால், சுசீந்திரம், தேரூர், மணக்குடி காயல் பகுதிகளை பறவைகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க இயற்கை நண்பர்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தமிழக அரசு பறவைகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது. இதனால், பறவைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுடன், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் பறவைகளை கண்டு களிக்க காட்சி கோபுரங்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

பறவைகள் கூடு கட்டாத மரம்

பறவைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறிய வியப்பூட்டும் தகவல்கள்...

*பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இடம் பெயர்ந்து வருகிறது என்பது தவறான தகவல். அவை தங்கள் சொந்த நாட்டிலேயே இனப்பெருக்கம் செய்யும்.
*17 கிராம் கொண்ட கொசு உல்லான் வடதுருவ பகுதியில் இருந்து 3 நாட்களில் வருகின்றன.
*கடல்புறாக்கள் நீரில் உறங்கும்.
*இலந்தை மரத்தில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
*குவாரன் பறவை மல்லாந்து உறங்கும்.
*மரங்கொத்தி ஒரு நொடிக்கு 20 தடவை மரத்தை கொத்தும்.
*வெட்டுக்கிளிகளை மைனா வேட்டையாடுகிறது.
*வான்கோழியின் தாயகம் அமெரிக்கா
*புல்புல் எனப்படும் கொண்டைக்குருவி (இது தமிழக பறவை) ஈக்கள், கொசு, ஈசல், விட்டில் பூச்சிகளை உணவாக கொள்கின்றன.

Tags : extinction ,arrival ,centers ,Kumari , Nagercoil: Foreign birds are coming to Kumari district due to extinction of habitats
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!