×

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நீலகிரியில் மேலும் 700 படுக்கை வசதி: சுகாதார துணை இயக்குநர் தகவல்

ஊட்டி:  நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்கனவே 750 படுக்கை வசதி உள்ள  நிலையில், மேலும் 700 படுக்கை தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 4750ஐ  கடந்துள்ளது. இதுவரை 3866 பேர் குணமடைந்த நிலையில், 850க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டி, குன்னூர் அரசு  மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையங்களில் (கோவிட் கேர்)  தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், நீலகிரியில்  உள்ள மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்கள் 90 சதவீதம் அளவிற்கு நிரம்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள  சுகாதாரத்துறை, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 750 படுக்கை வசதிகள் உள்ளதாகவும், இதில் 477 படுக்கைகளில்  கோரோனா பாதித்தவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 273 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் ெதரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்  200க்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதவிர 220 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுச்சாமி கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி அரசு மருத்துவமனை,  கோவிட் கேர் மையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து மொத்தம் 750 படுக்கைகள் உள்ளன. 477 படுக்கைகளில் கொரோனா பாதித்தவர்கள்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 274 படுக்கைகள் காலியாக உள்ளன. லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்களது  வீடுகளில் தேவையான வசதிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்படி 260 பேர் வீட்டு தனிமையில்  உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 20க்கும் மேற்பட்டோர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கூடுதலாக 700 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு  அதிகரிக்கும் பட்சத்தில் இவை பயன்படுத்தி கொள்ளப்படும். கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 100க்கு மேல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும்  நிலையில், நாள்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதால் படுக்கை வசதிகள் பற்றாக்குறை போன்ற  பிரச்சனைகள் இல்லை. சளி மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கிடைத்து விடுகின்றன. இதில் எந்த தாமதமும்  இல்லை. இவ்வாறு சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுச்சாமி கூறினார்.


Tags : Deputy Director of Health ,Nilgiris , As corona exposure increases 700 more beds in Nilgiris: Deputy Director of Health Information
× RELATED சிவகங்கையில் சுகாதாரப்பணி இணை இயக்குநர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு