×

சேலத்தில் உரிய அனுமதியின்றி போதைக்காக இதய வலி மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்ற மொத்த வியாபாரி: குடோனில் பதுக்கிய 7 லட்சம் மருந்துகள் பறிமுதல்

சேலம்: சேலத்தில் உரிய அனுமதியின்றி மருந்து, மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த கம்பெனி  உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இளைஞர்களுக்கு போதைக்காக அதிகவிலைக்கு மருந்து,மாத்திரை விற்றதும் அம்பலமாகியுள்ளது.  டாஸ்மாக் விற்பனையில் களை கட்டும் சேலம் மண்டலம் சமீப காலமாக பான்பராக், குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் கடத்தல்  மையமாகவும் மாறி வருகிறது. இதே போல் மாத்திரைகள், டின்னர், சொலுசன் என்று நூதன போதைக்கு இளைஞர்கள் அடிமையாகும் அவலமும்  தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் போதையை நாடும் இளைஞர்களை குறிவைத்து இதய வலி மாத்திரைகளை டாக்டரின்  பரிந்துரை சீட்டு இல்லாமல் ஒரு சில மருந்து கடைகளில் அதிக விலைக்கு விற்பதாக திடுக்கிடும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மருந்து  கட்டுப்பாட்டு துறையினர் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சேலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உரிய அனுமதியின்றி மருந்து, மாத்திரைகளை மொத்தமாக பில் இல்லாமல்  விற்பதாக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு  சென்று  சோதனை செய்தனர். அப்போது, அங்கு உரிய அனுமதியில்லாமல் ₹7 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது  கண்டறியப்பட்டது. இங்கிருந்து பில் இல்லாமல் அதிக விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வலி மாத்திரைகள் போதைக்காக  இளைஞர்களுக்கு விற்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த குடோனில் இருந்த மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த  அதிகாரிகள், அந்த மொத்த வியாபாரி மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த மாத்திரைகள், மருந்துகளை சேலம் கோர்ட்டில்  ஒப்படைத்தனர். அந்த குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு சேலம் தாதகாப்பட்டியில் ஒரு வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து  போதை ஊசி போட்டு கொண்டதில், உயிரிழந்தார்.  அந்த இளைஞர்களுக்கு தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டியில் உள்ள 2 மருந்து கடைகளில் இதய வலி மாத்திரைகளை போதைக்காக அதிக விலைக்கு  விற்கப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த கடை உரிடையாளர்கள் மீதும் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, இளைஞர்களுக்கு போதைக்காக, வலி மாத்திரைகள்,மருந்துகளை அதிக விலைக்கு ஒரு சில மருந்து கடைகள் மூலம் விற்பது தொடர்ந்து  மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும், போலீசாருக்கும் புகார் வருகிறது. அப்புகாரின் அதிகாரிகள் மருந்து கடைகளை தொடர்ந்து கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Wholesaler ,youths ,Salem , Heart pain pills for intoxication without proper permission in Salem Wholesaler sold to youths: 7 lakh drugs stashed in godown
× RELATED எல்லப்பநாயக்கன்குளத்து வாய்க்கால் முட்செடிகளை அகற்றிய இளைஞர்கள்