×

போராட்டம் நடத்துவதற்கு காலவரையின்றி பொது இடங்களை பயன்படுத்துவதை ஏற்க முடியாது : ஷாகின் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி,:இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளின் குறுக்கே போராட்டம் நடத்துவது என்பது பொதுமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்று டெல்லி ஷாகின் பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது. இதையடுத்து சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் மட்டும் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இரவு பகலாக அங்கேயே கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே மிகப்பெரும் கலவரம் ஏற்பட்டு பின்னர் அதவன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமானோர் பரிதாபமாகவும், மர்மமான முறையிலும் இறந்தனர்.

இந்த சூழலில் தான் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேச்சு வாரத்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தது. இதையடுத்து இருவரும் ஷாகின் பாக் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தியும் அதுவும் பலன் இல்லாமல் போனது. இது நீதிமன்ற உத்தரவையும் மீறும் செயலாக கருதப்பட்டது. இதையடுத்து தான் கொரோனோ வைரைஸ் தொற்றை காரணம் காட்டி கடந்த மார்ச் 24ம் தேதி போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப்படுத்தி சம்பவ இடத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதில்,டெல்லி ஷாகின் பாக் போராட்டத்தால் மாநிலங்களுக்கு இடையே உள்ள போக்குவரத்து இடைக்காலமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு அவசர காலத்திற்கு கூட செல்ல முடியாது சூழல் நிலவி வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்ட தளத்தையே உடனடியாக அங்கிருந்து அகற்ற நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை பல கட்டங்களாக விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில்,யாராக இருந்தாலும் தங்களுக்குக்கான அங்கீகாரம் மற்றும் உரிமையை கேட்பதில் தவறில்லை. இருப்பினும் அதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது. குறிப்பாக இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாக பொதுவான சாலைகள், வழித்தடங்கள் ஆகியவற்றில் போராட்டம் நடத்துவது என்பது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். அதனால் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது கண்டிக்கத்தக்கது. வரும் காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்த நீதிபதிகள் ஷாகின் பாக் தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : protests ,Supreme Court ,Shakin Bagh , Struggle, Public Places, Shakin Bagh Case, Supreme Court, Judgment
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து