×

பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி : கேரள அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் இல்லை

திருவனந்தபுரம்,: கேரளாவில் போராட்டங்களை அடுத்து அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையில் இருந்து அரசு பின்வாங்குகிறது. கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதையடுத்து செலவீனங்கள் அதிகரித்து, வருமானம் குறைந்து அரசு கஜானா காலியாகி வருகிறது. தற்போது கடும் நிதி நெருக்கடியில் அரசு சிக்கி உள்ளது. அதன்படி பல நலத்திட்டங்களை நடத்தவும் பணம் இல்லை.

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்தது. இதையடுத்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளம் தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது தவிர மேலும் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்திருந்தது.இதற்கு ஆளும் இடதுசாரி அரசில் இடம்பெற்றுள்ள பல கட்சிகள், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஊதியக்குறைப்பு தொடர்ந்தால் வேலைநிறத்த போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதையடுத்து கேரள அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்கும் முடிவை திரும்பப்பெற கேரள அரசு தீர்மானித்து உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு மத்திய அரசு தெரிவித்த கடன் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்தால், கூடுதலாக ₹8,000 கோடியை கடன் வாங்க முடியும். ஆனால் ஒப்புதல் அளிக்காவிடில் கேரளாவால் பிடிக்க முடியாது. எனவே கடன்பெறும் யோசனையை அரசு ஏற்கும் என தெரிகிறது.₹8,000 கோடி கிடைத்தால் அரசு ஊழியர்களின் சம்பள குறைப்பை கைவிடலாம். அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை எடுத்துக்கொள்வது, நிதி நெருக்கடியின்போது சுமார் ₹2,600 கோடி செலவினத்தை தற்காலிகமாக தவிர்க்கலாம் என மதிப்பிடப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை அடுத்த ஏப்ரல் மாதத்தில் வருங்கால வைப்புநிதியில் இணைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆனாலும் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பி.எப். இல்லாதவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பணத்தை கணக்கில் திருப்பித்தரவும் முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளம் மற்றும் இனிமேல் பிடிக்க உள்ள தொகையை, எந்த வழியில் திரும்ப வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய அரசு ஊழியர் சங்க அமைப்புகளுடன் கலந்துரையாட அமைச்சரவை தீர்மானித்திருந்தது. ஆனாலும் இறுதி விவாதம் நடக்காததால் குழப்பம் நீடிக்கிறது.

Tags : government employees ,favorite ,Kerala , Government of Kerala, Employees, Salary, Favorite
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்