×

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்க கூடிய வெளிமாநில மாணவ, மாணவிகள் கட்டாயம் 2 ஆண்டுகள் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 15 சதவீதமும், எம்.டி,எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படுகிறது.

முதுகலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. சேர்க்கையின் போதே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே அவர்களுக்கு முழுமையான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து, தமிழகத்தில் படிக்கக்கூடிய வெளிமாநிலத்தைச் சேர்ந்த அபிநயா, அஜய் பாத்திமா உள்ளிட்ட 276 மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், அகில இந்திய மருத்துவ படிப்பு தேர்வு குறிப்பேட்டில் இதுபோல் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என்றும், இது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாணவ, மாணவிகள் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் நிபந்தனை விதித்துக் கொள்ளலாம் என்று விதிகள் உள்ளன. தமிழக அரசின் வளத்தைப் பயன்படுத்தக் கூடிய மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தமிழக மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும். அதனால்தான் அந்த இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை கொண்டுவரப்பட்டுள்ளது என்று வாதிட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழக மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவப் படிப்பு படிக்கும் அகில இந்திய ஒதுக்கீடு மாணவர்கள் கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். பணிபுரிந்த பின்பே சான்றிதழ் வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான். அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்று உத்தரவிட்டனர். தமிழக அரசின் வளத்தைப் பயன்படுத்தக் கூடிய மாணவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது தமிழக மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்.

Tags : colleges ,Tamil Nadu ,India ,High Court , All India quota for students studying in Tamil Nadu medical colleges to work in government hospitals will go up: High Court verdict
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...