×

அறந்தாங்கியில் மூடியே கிடக்கும் வாரச்சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கடும் அவதி

அறந்தாங்கி: கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த வாரச்சந்தைகள் பல நகரங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அறந்தாங்கியில் உள்ள வாரச்சந்தை  மூடியே இருப்பதால் வியாபாரிகளும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில், தஞ்சை மாவட்ட சத்திரம் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வாரசந்தை இயங்கி வருகிறது. செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் இச்சந்தையில் ஆடு, மாடு, காய்கறி, பழம், மீன், நண்டு, வைக்கோல், கோழி , மண்பானை போன்றவறை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அறந்தாங்கியில் நடைபெறும் வாரச்சந்தைக்கு வியாபாரிகள் வருவது வழக்கம். பொருட்களை விற்பனை செய்வதற்காகவும், பொருட்களை வாங்கிச் செல்வதற்காகவும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

அறந்தாங்கி வாரச்சந்தையில் வாரந்தோறும் பல லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். சாகுபடி காலம் தொடங்கி விட்டால், விற்பனை இன்னும் பல மடங்கு உயரும். மேலும் விவசாயிகள் தங்கள் வயல்களை உழுவதற்காக உழவு மாடுகளை வாங்குவதற்காக இங்கு முதல்நாளே வந்து முகாமிட்டு, மாடுகளை வாங்கிச் செல்வார்கள். இதுதவிர சாகுபடி செலவிற்காக விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் மாடுகளை அறந்தாங்கி வாரச்சந்தையில் விற்பனை செய்வதும் வழக்கம். இதேபோல விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி வாரச்சந்தையில் புதிதாக விலை குறைவாக கிடைக்கும் காய்கறிகளை மொத்தமாக வீடுகளுக்கு வாங்கிச் செல்வதும் வழக்கம்.

அறந்தாங்கி நகரில் வாரச்சந்தை இருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டம் உருவானபோது, தஞ்சை மாவட்ட நிர்வாகம், சத்திரம் நிர்வாகத்திற்கு சொந்தமான இந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடமோ, அப்போதைய பேரூராட்சியான இப்போதைய அறந்தாங்கி நகராட்சியிடமோ ஒப்படைக்கவில்லை. இதனால் தற்போது வரை அறந்தாங்கி வாரச்சந்தையை தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஏலம் விட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அறந்தாங்கி வாரச்சந்தை மூடப்பட்டது. தொடர்ந்து சில மாதங்கள் கழித்து அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட் அறந்தாங்கி வாரச்சந்தைக்கு மாற்றப்பட்டு, அங்கு இயங்கி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்களில் பல தளர்வுகளை அமல்படுத்தியதால், வௌ்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அறந்தாங்கி வாரச்சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு இயங்கியது.

ஆனால் அறந்தாங்கி வாரச்சந்தையை திறக்க தஞ்சை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அறந்தாங்கி வாரச்சந்தையை நம்பியுள்ள வியாபாரிகளும், இப்பகுதி விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், கொரோனா ஊரடங்களில் பல தளர்வுக்கு பிறகு புதுக்கோட்டை வாரச்சந்தை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி வாரச்சந்தையை இன்னும் திறக்கவில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறந்தாங்கி வாரச்சந்தை திறக்கப்படாமல் மூடியே கிடப்பதால் அவர்களுக்கு மேற்கொண்டு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அறந்தாங்கி வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தஞ்சை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அறந்தாங்கி வாரச்சந்தையை திறந்து, செவ்வாய்கிழமை தோறும் சந்தையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : market traders ,Aranthangi , aranthangi, weekly market traders, farmers
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு