×

இது நம்ம ஊரு செய்யாறு: பதிகம் பாடி ஆண் பனை பெண் பனையான அதிசயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக அதிக வருவாய் ஈட்டி தருவது செய்யாறுதான். செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களை உள்ளடங்கிய இப்பகுதியில் செய்யாறும், பாலாறும் ஓடுவதால் விவசாயத்திற்கும் பஞ்சமில்லை.
சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநிலத்திலேயே 2வது பெரிய நெல் சாகுபடி செய்யும் பகுதியாகவும், தொழில் ரீதியாக மாங்கால் கூட்ரோடு பகுதியில் சிப்காட் நிறுவனங்களில் 25 ஆயிரம் பெண்கள் உட்பட 32 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

செய்யாறில் பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் கால கல்வெட்டுகளும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அவர்களை தொடர்ந்து குறுநில மன்னர்களான கோனேரியான் மன்னர் ஆட்சி செய்துள்ளார். மேலும், வந்தவாசியில் நடந்த போருக்காக வந்திருந்த போர்ப்படை தளபதி தலைமையிலான வீரர்கள் 1761ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி செய்யாற்றில் கரைபுரண்டோடிய நீரினால் சுமார் ஒரு வாரம் காலம் திருவோத்தூர் வேதபுரீஸ்வர் கோயில் அருகே தங்கியிருந்து, 21-ம் தேதி புறப்பட்டு 22ம் தேதி வந்தவாசி போர் நடந்ததாக வரலாறு.

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் அதிசய பனைமரங்கள் உள்ளன. இந்த பகுதியில் சமணர்களுக்கும், சைவர்களுக்கும் போட்டி நிலவி வந்த நிலையில், அப்போது சுற்றுப்பயணம் வந்த திருஞானசம்மந்தரிடம் முறையிட்டனர். அதற்கு கோயிலில் உள்பிரகாரத்தில் இருந்த பனைமரத்தடியில் திருஞான சம்மந்தர் படிகம் பாடினார். அப்போது 11வது படிகம் பாடி முடிக்கையில், அங்கிருந்த ஆண் பனைமரங்கள் அனைத்தும் குறும்பை ஈன்று திருஞான சம்மந்தர் கையில் விழுந்த அதிசயம் நடந்தது. இன்றைக்கும் ஆடி மாதத்தில் வேதபுரீஸ்வரர்கோயிலில் உள்ள பனைமரத்தில் இருந்து தானாக விழும் பழங்களை எடுத்து குழந்தை இல்லாதவர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.

செய்யாறைச் சேர்ந்த பா.ராமச்சந்திரன், காங்கிரஸ் ஆட்சியின்போது கேரள மாநில ஆளுநராக இருந்தார். புலவர் கா.கோவிந்தன் 100க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளதுடன் திமுக ஆட்சியின்போது சபாநாயகராகவும் இருந்துள்ளார். அதிமுக ஆட்சியில் முக்கூர் பகுதியைச் சேர்ந்த என்.சுப்பிரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்துள்ளார். செய்யாறில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ் வசதி, தொலை தூர பஸ் வசதி ஏற்படுத்தி, செய்யாறு பஸ் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். மாங்கால் சிப்காட் முதல் செய்யாறு வரை 4 வழிச் சாலையாக அகலபடுத்துதல், விவசாயம் நிறைந்த செய்யாறு ஆற்றுப் பகுதியில் தடுப்பனைகள் கட்ட வேண்டும். 60 சதவீதம் கிராமப்புற மகளிர் உள்பட சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மகளிருக்கென்று தனியாக கலை கல்லூரி அமைக்க வேண்டும்.

செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சி எல்லையை விரிவு படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த 1959ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உதயமான செய்யாறு வருவாய் கோட்டம் 61 ஆண்டுகளாக அதே நிலையில் உள்ளது. செய்யாறு தாலுகாவில் வெங்கோடு, ஆலத்தூர், தென்எலப்பாக்கமும், வெம்பாக்கம் தாலுகாவில் பனமுகை, வடஇலுப்பை, பிரம்மதேசம், செய்யனூர், சுருட்டல், அப்துல்லாபுரம், சோதியம்பாக்கம், சித்தலபாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல சுமார் 150 கி.மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. மேலும் விவசாயிகள், முதியோர்கள், அரசுஅலுவலர்கள், மருத்துவம் மற்றும் கல்வித்துறை, பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசார் உள்ளிட்டோருக்கு ஒரு நாள் முழுவதும் வீணாகிவிடுகிறது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு, நிர்வாக வசதிக்காக செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க 21 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.

செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, பெரணமல்லூர், ஆற்காடு, காஞ்சிபுரம், வாலாஜா, மானாமதி, உத்திரமேரூர் போன்ற நகரங்களிலிருந்தும் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மாணவிகள் 54 சதவீதத்திற்கு மேலாக அதிக அளவில் உயர்கல்வி பயின்று வருவதால் மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும். வாலாஜாவில் மட்டும் ஒரு அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதுத் தவிர்த்து மகளிருக்கென்று அரசு கலைக்கல்லூரி இல்லை. செய்யாறில் உள்ள பல்வேறு பிரச்னைகளை போக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மாமண்டூர் குகைக்கோயில் : மாமண்டூர் குகைக்கோயில் பல்லவர்காலத்தில் அமைக்கப்பட்டு, அழகுற அமைந்துள்ளன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைக்கோயிலில் மலையை குடைந்து குடவறை ஓவியங்களும், கற்சிற்பங்களும் உள்ளது. சமண முனிவர்கள் தங்கியிருந்து தவம் செய்ததாக வரலாறு உள்ளது.

குரங்கணில்முட்டம் : வெம்பாக்கம் தாலுகாவில் வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு குரங்கு, அணில், காகம் வழிபாடு செய்ததன் விளைவாக சிவபெருமான் அவர்களுக்கு காட்சிதந்து, மோட்சம் அளித்தார். ஆகவே இக்கோயிலில் சென்று வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். இக்கோயிலின் அருகிலேயே தொல்லியல் துறை கோயில் கட்டுப்பாட்டில் குடைவறை கோயில் இடம்பெற்றுது. தெருக்கூத்தை வளர்க்கும் குரிசை கிராமம்: நவீன வாழ்வில் தமிழர்களின் தொன்மையான கலைகள் அழிந்து வருகிறது. இந்நிலையிலும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து வளர்ப்பதில் குரிசை கிராமம் சிறப்புமிக்கதாக உள்ளது.

திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய வேதபுரீஸ்வரர் கோயில்: உலகில் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணியஸ்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் தேவர்களுக்கெல்லாம் வேதம் ஓதிய செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் மிகச்சிறப்பு வாய்ந்தது. தேவர்கள் இறைவனுக்காக வேதம் ஓதும்போது, அசுரர்களால் தீங்கு ஏற்படாமல் பாதுகாக்க வாயில் பார்த்து நந்தி அமர்ந்திருக்கும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். இந்தியாவிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த நாகலிங்கம் : நாகலிங்கத்தின் கீழ் பூமாதேவிக்கு இருபுறமும், மீன்களும், அதன்மேல் ஆமையின் உருவமும், அதற்கு மேல் 8 யானைகளும், அதற்குமேலாக 11 தலை கொண்ட நாகம் உள்ளது. நாகதோஷம், நவக்கிரக தோஷம் மற்றும் திருமண தடைநீங்கி லட்சுமி கடாட்சம் கிடைப்பது ஐதீகம். எனவே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளாக ராகு கால பூஜை நடைபெறும்.

பிரசித்தி பெற்ற ஜடேரி நாமம்: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அனைவரது நெற்றியிலும் மிளிரும் நாமம், செய்யாறு அருகே 7 கிலோமீட்டர் தொலைவில் ஜடேரி எனும் கிராமத்தில் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இக் கிராமத்தில் தான் இயற்கையாகவே நாமத்திற்கான மண் அமைந்துள்ளது. வரலாற்று ஆதாரங்கள் : சமண மதம் திளைத்திருந்த இப்பகுதியில் திருஞானசம்பந்தரின் வருகைக்கு பின் அனல் வாதம், புனல் வாதம் நடந்தது. ஆற்றுநீரில் ஓலைச்சுவடி எதிர் நீச்சல் போட்டு வந்ததால் சைவம் வென்று மிகப்பெரிய மாற்றமே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தேறியுள்ளது. கற்படுக்கை: சித்தாத்தூர், காகனம், வேளியநல்லூர், பாண்டியம்பாக்கம், காழியூர், அத்தி, எச்சூர், செய்யாற்றைவென்றான், பாராசூர், குடநகர். அருகாவூர், தூசி, மாமண்டூர், நரசமங்கலம், குரங்கணில் முட்டம், உக்கல், கூழமந்தல் ஆகிய பகுதிகளில் சமண கோயில்களும், சமணப் படுக்கைகளான கற்குகைக்குள் கற்படுக்கை இருப்பது வரலாற்று ஆதாரங்களாக உள்ளது.

செய்யாறா? திருவத்திபுரமா?: செய்யாறுக்கு திருவத்திபுரம் என்று மற்றொரு பெயர் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக குழப்பம் நீடித்து வருகிறது. இதில் தலைமை தபால் அலுவலகம், நகராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு நகர வங்கி உள்ளிட்டவை திருவத்திபுரம் என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே ஊருக்கு 2 பெயர் இருந்து வருவதால், குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க நடைமுறையில் உள்ள ஊர்பெயரான செய்யாறையே மேற்கண்ட அலுவலகங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : town , Thiruvannamalai, seyyaru
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி