×

10 ஆண்டாக சாலை வசதி கேட்டு அலையும் மக்கள்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் பொன்மலை கோட்டம் 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆர்எஸ்புரம் பார்க் அருகில் ராஜகணபதி நகர் உள்ளது. இது முதலாவது வீதி முதல் 4வது வீதி வரை நான்கு தெருக்கள் உள்ளது. இதில் 2வது வீதி முதல் 4வது வீதி வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது வீதியில் இன்று வரை தார் சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக காட்சி தருகிறது. மழைக்காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் எந்த ஒரு வாகனங்களையும் அவரச தேவைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோட்ட அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் என அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து அப்பகுதி மக்கள், குடியிருப்போர் நலச்சங்கம் சார்பிலும் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால், 10 ஆண்டுகளாகவே பல்லாங்குழி சாலையாக காட்சி தருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பு சாலை பகுதியை சரி செய்ய தங்கள் சொந்த செலவில் அவ்வப்போது கிராவல் மண் அடித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுபாஷ்ராமன் கூறுகையில், மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூங்காக்கள் அமைக்க கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள சாலை வசதி என்பது கானல் நீராக உள்ளது வேதனை அளிக்கிறது. வயதான காலத்தில் தார் சாலை கேட்டு நடையாய் நடந்தும் கோரிக்கையை கண்டுகொள்ள ஆள் இல்லை. எனவே தற்போதையை புதிய மாநகராட்சி ஆணையராவது எங்களின் 10 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Tags : road facilities , Road facility
× RELATED மழைநீர் வடிகால், சாலை வசதிகளை...