×

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: பலே ஆசாமி கைது

சென்னை: வண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவை சேர்ந்த ரவிக்குமார் (எ) நிஜாமுதீன் (51), தன்னை சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என கூறிக்கொண்டு வலம் வந்துள்ளார். மேலும், கடந்த 2015ம் ஆண்டு திருவான்மியூர் வாசுதேவன் நகரில் சினிமா தயாரிப்பு அலுவலகம் தொடங்கி உள்ளார். பின்னர், சினிமாவில் நடிப்பவர்களுக்கு சமையல் செய்து தர ஆட்கள் வேண்டு என துண்டு பிரசுரம் மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த பாலவாக்கம் செங்கேணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஷானாஸ் பேகம் (52) வேலை கேட்டு ரவிக்குமார் அலுவலகம் சென்றுள்ளார்.அப்போது ரவிக்குமார், நான் 2 திரைப்படங்கள் தயாரிக்க உள்ளேன். அதற்கு பணம் பற்றாக்குறையாக உள்ளது. யாராவது பணம் கொடுத்தால், சில நாட்களில் இருமடங்கு பணம் தருவேன், என கூறியுள்ளார்.

இதை நம்பிய ஷானாஸ் பேகம், தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 27 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ரூ.7 லட்சத்தை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்களது பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோரிடம் இதுபற்றி ஷானாஸ் பேகம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், பலர் சுமார் 60 லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால், நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளார். இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் ரவிக்குமார் அலுவலகம் சென்றபோது, பணம் வங்கியில் உள்ளது. அதை எடுத்து வர ஆட்களை அனுப்பி உள்ளேன். அதுவரை எனது அலுவலகத்தில் காத்திருங்கள், என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் பழரசம் கொடுத்துள்ளார். அதை குடித்த அனைவரும் மயங்கினர். இதையடுத்து, ரவிக்குமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகினர்.

மயக்கம் தெளிந்து எழுந்த பாதிக்கப்பட்ட நபர்கள், இதுபற்றி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், தனிப்படை போலீசார் தலைமறைவான ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களுருவில் பதுங்கி இருந்த ரவிக்குமார், அடிக்கடி காரில் சென்னை திருவல்லிக்கேணி வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வந்த ரவிக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் சொந்த ஊர் நாகப்பட்டினம் என்றும், சினிமா மீது கொண்ட ஆசையில் சென்னை வந்ததாகவும், பின்னர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பலரை ஏமாற்றியதும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Bale Asami , Bale Asami arrested for defrauding millions
× RELATED டெல்லி ஆடிட்டரிடம் 4 கோடி இடத்தை பாதி...