×

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர், துணை முதல்வரை சந்திப்பதில் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர், துணை முதல்வரை சந்திப்பதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு தனியார் அமைப்பு சார்பில் பாராட்டு விழா, வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில், அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதை பார்த்து பிரதமரே பாராட்டியுள்ளார். இதனை யாராலும் மறுக்க முடியாது.

முதல்வர் மற்றும் துணை முதல்வரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் சந்திப்பது இயல்பான ஒன்று. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகிற 7ம் தேதி அறிவிக்கப்படும், என்று துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. அதுவே எங்களின் நிலைப்பாடு.சட்டமன்ற தேர்தலை மிகுந்த எழுச்சியுடன் சந்திப்பதற்கு அதிமுக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தனியாக நின்று வெற்றி பெறக்கூடிய வலிமையான கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் நடந்துவரும் குழப்பங்களை சரி செய்யாவிட்டால் அதிமுக ஆட்சியை பிடிக்காது, என இல.கணேசன் கூறியது அவருடைய கருத்து. இதில் நான் ஒன்றும் கருத்துக்கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Deputy Chief Minister ,Ministers ,Pandiyarajan , Ministers, MLAs have no intention of meeting Chief Minister, Deputy Chief Minister: Interview with Minister Pandiyarajan
× RELATED மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு...