×

ஊரடங்கு தளர்ந்தும் விழி பிதுங்கும் உரிமையாளர்கள் தொழில்கள் முடக்கம், வரி விதிப்புகளால் பரிதவிக்கும் மோட்டார் வாகனத்தொழில்

* சாலையோரங்களில் முடங்கி நிற்கிறது லாரிகள்
* வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் தவிப்பு

நாமக்கல்: இந்தியாவிற்கு பெருமளவில் பொருளாதாரத்தை ஈட்டித்தருவதில் விவசாயத்திற்கு அடுத்து மோட்டார் வாகனத்தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. லாரிகள், பஸ்கள், வேன்கள், கார்கள் என்று தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் மோட்டார் வாகனங்கள் உள்ளது. இதனை நம்பி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள், மெக்கானிக்குகள், உதிரிபாக விற்பனையாளர்கள், உபரி தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு 6 மாதத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு மோட்டார் வாகனத் தொழிலை முற்றிலும் முடக்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை மோட்டார் வாகனத் தொழிலில் லாரிகளின்  பங்களிப்பே  பிரதானமாக உள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது லாரிகள் இயங்கினாலும் 50 சதவீத லாரிகளுக்கு மட்டுமே  லோடு கிடைக்கிறது. ஊரடங்கால் உற்பத்தி முடங்கிய தொழிற்சாலைகளின் இயக்கம் தற்போது பாதியாக  குறைந்துள்ளது. இதனால் பொருட்கள் உற்பத்தி தடைபட்டு, லோடுகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் முரண்பாடாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து வடமாநிலத்திற்கு செல்லும் போது, கடந்து செல்லும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடைமுறையும், விதிமுறையும் கடைபிடிக்கப்படுகிறது. இது லாரிகள், பஸ்கள், கார்கள், வேன்கள் என்று மோட்டார் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் பெரும் சிரமமாக உள்ளது.

இதேபோல் இக்கட்டான இந்த சூழலிலும் சாலைவரி, சுங்க கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் என்று அனைத்தும் உயர்ந்துள்ளது. அதோடு டீசல் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஜிஎஸ்டிக்கு பிறகு பெரிய ஆலைகள் மற்றும் அரசு  தொழில் நிறுவனங்கள் டன்னுக்கு ₹100 கட்டணக்குறைப்பு செய்துள்ளது. இப்படி அடிக்கு மேல் அடி விழுந்து தொழில் முடங்கிக்கிடக்கும் நிலையில் குறைந்த பட்சம் ஒவ்வொரு வாகனத்திற்கும் மாதம் ₹65ஆயிரம் இஎம்ஐ கட்டவேண்டிய சூழல் உள்ளது. இதனால் லாரிகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் இயக்கம் ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்கின்றனர்.

லாரி உரிமையாளர்கள் காலாண்டு வரியை செலுத்த முடியாமல், தங்களது வாகனங்களின் பர்மிட்டை ஆர்டிஓ அலுவலங்களில் சரண்டர் செய்யும் நிலையும் உருவாகியுள்ளது.பெரும்பாலான லாரிகள் சாலையோரங்களிலும், லாரி உரிமையாளர்களின் வீடுகள் முன்பும் மாதகணக்கில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில் முடங்கியுள்ளதால், லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் என்ற  லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்கவில்லை.  லாரி உரிமையாளர்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழகஅரசும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டிஓ அலுவலகங்களில் லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பிக்கும் போது, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் பிரதிபலிப்பு ஸ்டிக்கரை  ஒட்டவேண்டும். அதே போல போக்குவரத்து ஆணையரின் அனுமதி பெற்ற வேகட்டுபாட்டு கருவிகளை மட்டும் பொறுத்தவேண்டும் என கெடுபிடி விதித்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது. இப்படி கொரோனா கால நெருக்கடிகள் லாரித்தொழிலுக்கு மட்டுமன்றி, அனைத்து வகை மோட்டார் தொழிலுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

கால அவகாசம் கொடுத்துள்ளோம்
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் லாரித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலாண்டுவரியை லாரி உரிமையாளர்கள் செலுத்த போதுமான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ், பர்மிட் (அனைத்து வகை), ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் காலாவதியாகும் தேதியை வரும் டிசம்பர் 31ம் தேதிவரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது,’’ என்றனர்.

நெருக்கடியை போக்க அரசு உதவ வேண்டும்
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செயலாளர் வாங்கிலி கூறுகையில், ‘‘லாரித்தொழிலை பொறுத்தவரை இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. 24 மணி நேரமும்  தமிழகத்தில்இயங்கிவந்த சிறுகுறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள்  தற்போது ஒரு ஷிப்டு மட்டும் 50 சதவீத ஊழியருடன் இயக்கப்படுகிறது. இதனால் பொருட்களின் உற்பத்தி குறைகிறது. லாரிகளுக்கு போதுமான லோடு கிடைக்கவில்லை. நிதி நிறுவனங்களின் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே  லாரிகளை இயக்க முடிகிறது.

டீசல், டிரைவருக்கு சம்பளம், வழிசெலவு என கிடைக்கும் வாடகை அனைத்தும் செலவாகிவிடுகிறது. இதனால் காலாண்டு வரியை கூட செலுத்தமுடியாத நிலையில் லாரி உரிமையாளர்கள் தவிக்கிறார்கள். நஷ்டத்தை ஈடுகட்ட முடியாத பலர், மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க மத்திய, மாநில அரசுகள் உதவவேண்டும்,’’ என்றார்.

முற்றிலும் பாதித்தது எங்கள் வாழ்வாதாரம்
லாரி டிரைவர் ரவி கூறுகையில், ‘‘30 ஆண்டுகளாக லாரி டிரைவராக இருக்கிறேன். கொரோனாவால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாதம் மூன்று லோடு மட்டும் தான் கிடைக்கிறது. இதற்கு முன்பு  இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. லோடு குறைவாக இருப்பதால், லாரி உரிமையாளரே டிரைவராக மாறி விடுகிறார். மோட்டார் தொழிலை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. இதனால் லாரிக்கு தார்பாய் வாங்கி கொடுப்பது, வெளியூரில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு லோடு இறக்கும் இடத்தை காட்டுவது போன்ற வேலைகளை செய்து வருகிறேன். வேலை இல்லாமல் பெரும்பாலான நாட்கள், சாலையோரத்தில் லாரியை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே லாரி டிரைவர்களுக்கு அரசு நிவாரண உதவி அளிக்கவேண்டும்,’’ என்றார்.

தொழில் மேம்பாட்டுக்கு குழு அமைப்பது அவசியம்  
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத்தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறுகையில், ‘‘கொரோனா காலகட்டத்தை பொறுத்தவரை மோட்டார் வாகனத் தொழில் நடுக்கடலில் சிக்கி தத்தளிக்கிறது என்பதே உண்மை. எப்போதும் இல்லாத வகையில் வாடகை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தான் இந்த தொழிலுக்கான காலாண்டுவரி, இன்ஸ்சூரன்ஸ், சாலைவரி, சுங்கக்கட்டணம் என்று அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆர்டிஓ அலுவலகங்களை பொறுத்தவரை பணம் இல்லாவிட்டால் ஒரு குண்டூசி அளவுக்கு கூட, காரியங்கள் நிறைவேறாது என்ற நிலையே இப்போதும் தொடர்கிறது. இந்த தொழிலை ஒரு நாள் நிறுத்தினால் கூட, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். எனவே இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்க வேண்டும். ஒரு குழு அமைத்து தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : owners ,businesses , Curfew, freeze, taxation, motor, automotive
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...