×

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை திடீர் அதிகரிப்பு: பீன்ஸ் 30, சாம்பார் வெங்காயம் 20, இஞ்சி 10 உயர்ந்தது

சென்னை, அக்.4: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை திடீரென உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோவுக்கு 30, சாம்பார் வெங்காயம் 20, இஞ்சி 10 அதிகரித்தது. இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் அதே இடத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டது முதல் வழக்கம் போல் காய்கறிகள் வந்து கொண்டிருக்கிறது. தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வருகிறது. இருந்த போதிலும் சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. முட்டை கோஸ் 15லிருந்து 20, கேரட் 50லிருந்து 60, பீன்ஸ்ட் 40லிருந்து 70, பல்லாரி 15லிருந்து 25, சின்ன வெங்காயம் 40லிருந்து 70, பச்சை மிளகாய் 25லிருந்து 30, உருளைக்கிழங்கு 25லிருந்து 30, பாகற்காய் 30லிருந்து 35, சேனைக்கிழங்கு 30லிருந்து 35, சேப்பக்கிழங்கு 30லிருந்து 40, இஞ்சி 60லிருந்து 70, அவரைக்காய் 40லிருந்து 60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் 30லிருந்து 25 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் தக்காளி 30, வெண்டைக்காய் 25, புடலைங்காய் 20 என்று அதே விலையில் விற்பனையாகி வருகிறது. காய்கறி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் டீசல் விலை அதிகரிப்பே ஆகும்.

இதனால், லாரி கட்டணம் உயர்ந்து காய்கறி விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி வாங்க வருபவர்கள் வாங்கி கொண்டு உடனே செல்ல போகிறார்கள். அங்கே தங்குவது கிடையாது. அப்படியிருக்கும் போது குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்களை அனுமதிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் பழையபடி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை உயர்வு. இதனை வாங்கி சில்லரையில் விற்பவர்கள் கிலோவுக்கு 10 முதல் 15 வரை கூடுதலாக விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Coimbatore , Chennai, Coimbatore, Vegetable
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...