×

மகளிர் குழு சிறு கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மகளிர் சுயஉதவி குழுவினர் பெற்ற சிறு கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்களின் ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வருவாய் இழந்து தவிக்கும் கடன்தாரர்களுக்கு இது நிம்மதியளிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையின் நுணுக்கங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட போதிலும் கூட லட்சக்கணக்கானோர் கடன் தவணையை தவறாமல் செலுத்தி வந்தனர். ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததால், அது பெரும் சுமையாக அமைந்து விடும் என்பதால் தான் அவர்கள் தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கி தவணை செலுத்தினார்கள்.

அவர்கள் தவணையை செலுத்தி விட்டார்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகை வழங்க மறுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், அது அவர்களின் நேர்மைக்கு வழங்கப்பட்ட தண்டனையாக அமைந்து விடும். எனவே, அவர்கள் தவணை செலுத்தாமல் இருந்திருந்தால், வட்டிக்கு வட்டியாக அவர்களுக்கு எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமோ, அந்த தொகையை அவர்களுக்கு மானியமாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக, வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் இருந்து மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற சிறு கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : group ,Women ,government ,Reserve Bank ,Ramadas , PMK , Ramadas
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...