×

‘சாதாரண ஆளுங்களத்தான் புடிப்பாங்க...’‘100 கோடி ரூபா கடனை வாங்கிட்டு ஓடுறவங்கள எல்லாம் விட்டுருவாங்க...’: வங்கிகள் மீது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாய்ச்சல்

திண்டுக்கல்: நூறு கோடி ரூபாய் கடனை வாங்கிட்டு ஓடுறவங்கள எல்லாத்தையும் விட்டுருவாங்க...  சாதாரண ஆளுகளத்தான் பிடிப்பாங்க என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வங்கிகள் மீது குற்றம் சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் ஓம்சாந்தி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகளிடம் குறை கேட்டார். அப்போது வேடசந்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் என்பவர், ‘‘எங்கள் வீட்டில் சகோதரர்கள் 3 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளோம். கடன் வாங்கி பெட்டிக்கடை நடத்தி வருகிறோம். தொழிலுக்காக வேடசந்தூர் வங்கியில் கடன் கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் சொந்த இடம், வீடு இருந்தால்தான் கடன் தரமுடியும். இல்லையென்றால் பிச்சை எடுத்து பிழை என அவதூறாக பேசினர்’’ என்றார்.
இதைக்கேட்ட அமைச்சர், ‘‘100 கோடி ரூபாய் கடன் வாங்கிட்டு ஓடுறவங்கள எல்லாத்தையும் விட்டுருவாங்க... நம்மள மாதிரி சாதாரண ஆளுகளைத்தான் பிடிப்பாங்க...’’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

3 இடங்களில் பொதுமக்கள் முற்றுகை
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று வந்தார். முதலில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மைக்ேகல் ஆண்டவர் புதுத்தெருவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, ‘‘எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. எத்தனை முறை புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை’’ என்றனர். அதன்பின் மாலப்பட்டி-தென்போஸ்கோ நகர் மக்களும் அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து காமாட்சி நகரில் முற்றுகையிட்ட பெண்கள், வரி மட்டும் கட்டுகிறோம். சாலை, குடிநீர் வசதியில்லை’’ என்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், ‘‘சும்மா நொய்யி...நொய்யினு பேசாதீங்க... பேசிகிட்டு இருக்கேன்ல’’ என கோபப்பட்டார். இதனால், பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Dindukkal Srinivasan ,banks , Minister Dindukkal Srinivasan
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்