தசரா விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் கோயிலில் குவியும் பக்தர்கள்

உடன்குடி:மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா வெகுவிமரிசையாக  கொண்டாடப்படும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர். இந்தாண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வருகிற 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் தசரா விழா நடைபெற  உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு கார், வேன், லாரி, ஆட்டோக்களில் வந்த வண்ணம் உள்ளனர்.  

சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி சிவப்பு உடையணிந்து முத்தாரம்மன் கோயில் முன்பு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்டு  தாங்களே மாலை அணிந்து கொள்கின்றனர். இதனால் கடற்கரையில் இருந்து கோயில் வளாகம் வரை பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.  கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் நுழையாத வண்ணம் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனாவையும் பொருட்படுத்தாமல் நாளுக்குநாள் மக்கள் வருகை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>