×

7ம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் மோதல் ஏன்?

* தங்கமணி, தம்பித்துரை சந்திப்பு * திரைமறைவு திருப்பங்கள் *அதிமுக கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பம்

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோதிக் கொள்வது குறித்த திரைமறைவு  தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 7ம் தேதி முதல்வர்  வேட்பாளர் அறிவிப்பு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் துணை முதல்வர் திடீரென சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில்,  அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி, கட்சியையும்  ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதலில் அமைக்க வேண்டும். அந்த குழு தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு  செய்யும் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக கூறி வருகிறார்.

இந்த பிரச்னை காரணமாக கடந்த மாதம் 18ம் தேதி நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மற்றும் 28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, வருகிற 7ம்  தேதி (புதன்) அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த 4  நாட்களாக நேருக்கு நேர் சந்திக்காமல் மோதல் போக்குடன் உள்ளனர். அதேநேரம் தனது
ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 நாட்களாக தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்காமல்  அதிமுக கட்சியின் எந்த சமரசத்துக்கும் நான் இறங்கி வர போவதில்லை என்றும் ஓபிஎஸ் கூறுகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

அதிமுக கட்சி பிரச்னை குறித்து கடந்த 4 நாட்களாக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசாத நிலையில்,  வருகிற 7ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்  இணைந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எப்படி அறிவிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக  மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அதிமுக கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி  பழனிசாமி விரும்புகிறார். சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். அவர் வந்தால், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச்  சேர்ந்த சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவருடன் சென்று விடுவார்கள். அதிமுக உடையும். ஆட்சி முடிவதற்கு முன்னரே ஆட்சி கவிழும். அப்போது  அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி ஓபிஎஸ்சிடம் இருக்கும். இதனால் அதன் பின்னர் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க  முடியாது. அதிகாரம் இருக்கும்போதே அறிவித்து விட வேண்டும்.  160 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிட்டால், தேனி மாவட்டத்தை தவிர மற்ற  வேட்பாளர்களை நானே போட்டுக் ெகாள்கிறேன்.

வேட்பாளர்களுக்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று எடப்பாடி கூறுவார்.  பண விவகாரம் என்பதால் ஓ.பன்னீர்செல்வமும் தடுக்க முடியாது. இதனால் வேட்பாளர்களை முழுமையாக எடப்பாடி போடுவார். அப்படி என்றால் ஒரு  தொகுதிக்கு 5 பேர் விருப்ப மனு செய்தாலும், 5 பேர் வீதம் 800 பேர் தினமும் எடப்பாடி வீட்டு முன்பு காத்திருப்பார்கள். ஒருவர் கூட  ஓ.பன்னீர்செல்வம் வீட்டு வாசல் பக்கம் கூட போக மாட்டார்கள். கட்சி முழுமையாக எடப்பாடி பக்கம் என்று விடும். நாம் பிரச்சாரத்துக்கு மட்டுமே  செல்லக்கூடியவராக  மட்டுமே இருக்க முடியும் என்று ஓபிஎஸ் கருதுகிறார். இதை கருத்தை் கூறித்தான் பழனிசாமியின் ஆதரவாளர்களான தங்கமணி,  வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.அதேநேரத்தில், ஓபிஎஸ் வேறு கணக்கு போடுகிறார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியே இருக்கட்டும். நான் முதல்வர் வேட்பாளராக  போட்டியிடவில்லை.

அந்த அறிவிப்பை நான்தான் அறிவிக்க வேண்டும்.  அதற்கான கையெழுத்தை நான் போடுவதற்கு முன்னர் 11 பேர் கொண்ட  வழிகாட்டும் குழுவை நியமிப்பதற்கான கையெழுத்தத்தைத்தான் போடுவேன். அந்தக்குழு பரிந்துரையின்பேரில், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கிறேன் என்கிறார். அதற்கு காரணம் இருக்கிறது. வழிகாட்டும் குழு அமைத்தால், அந்தக்குழுதான் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று  ஓபிஎஸ் கூறுகிறார். அதன்படி பார்த்தால் எம்எல்ஏ வேட்பாளர்களை இந்தக் குழுதான் தேர்வு செய்யும்.

தன்னுடைய ஆதரவாளர்கள் 5 பேர் இருப்பதால்,  அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் பாதிக்குப்பாதி அதாவது 60, 40 என்ற விகிதத்திலாவது தன்னுடைய ஆட்களை வேட்பாளராக போடலாம்.  அப்போது தன்னுடைய வீட்டு வாசலிலும் கூட்டம் நிறைந்திருக்கும். வழிகாட்டும் குழு போடாமல் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து  விட்டால், அவரிடம் இருக்கும் எஸ்எம்எஸ் டீம்தான் வேட்பாளரை தேர்வு செய்யும். தனக்கு எதுவுமே தெரியாமல் போய்விடும் என்று கருதுகிறார்.இதனால், வழிகாட்டும் குழுவை நியமிக்க வேண்டும் என்பதில், ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாக இருக்கிறார். அவர் இப்போதும் முதல்வர்  வேட்பாளருக்கு போட்டியிடவில்லை. இதனால்தான் இருவரும் விடாப்பிடியாக உள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களாக துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரச பேச்சு நடைபெற்றது. தங்கமணி நேற்று முன்தினம், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். நேற்று தம்பித்துரை  சந்தித்துப் பேசினார். அவர்களிடம் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் குறித்து பேச முடியும் என்று அவர்  ஆணித்தரமாக கூறிவிட்டார். மேலும், வழிகாட்டு குழு அமைத்தால், அனைத்து சமூகத்தினரும் அதில் இடம்பெற வேண்டும். அதனால் தனது  ஆதரவாளர்கள் அனைவருக்கும் அதில் பொறுப்பு வழங்க முடியாது என்பதால், முதல்வர் எடப்பாடி அதை நிராகரித்து வருகிறார்.

இதற்கிடையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிய நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி  பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதிமுக கட்சியில் இனி ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இருக்க  வேண்டும். கையெழுத்து போடும் அதிகாரம் உள்பட அனைத்து உரிமையும் ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே வழங்க வேண்டும். இணை  ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி விட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இது தற்போது இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள  எடப்பாடிக்கு கட்சிக்குள் அதிகாரம் செலுத்தாமல் இருக்க முட்டுக்கட்டை போடுவதுபோல் ஆகிவிடும். இதற்கும், முதல்வர் தரப்பு இதுவரை சம்மதம்  தெரிவிக்கவில்லை. இதுபோன்ற திடீர் திருப்பத்தால் அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்” என்றார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து
அதிமுக முதல்வர் வேட்பாளர் வருகிற 7ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று கடந்த 28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.  ஆனாலும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்க  வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்  “அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வருகிற 6ம் தேதி சென்னை வர வேண்டும் என்று தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது” என்று செய்தி  வெளியானது. இதையடுத்து வெளிமாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சி தலைமையிடம் தொலைபேசி மூலம் கேட்கத்  தொடங்கினர். இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென தேனி புறப்பட்டு சென்று விட்டார். முதல்வர் - துணை  முதல்வருக்கு இடையே இன்னும் சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக நேற்று  பிற்பகல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, “அதிமுகவின் தகவல் தொடர்பு பிரிவில் உள்ள சிலரே இதுபோன்று வதந்தியை கிளப்பி  விட்டதாகவும்” கூறப்பட்டது.

Tags : clash ,Edappadi , Can the Chief Minister announce the candidate on the 7th Why the Edappadi Palanisamy-OPS clash?
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்