×

6 மாத சரிவுக்கு பிறகு கடந்த மாதம் ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு: தங்கம் இறக்குமதி 52.85 சதவீதம் சரிந்தது

புதுடெல்லி,: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், 6 மாத சரிவுக்கு பிறகு முதல் முறையாக ஏற்றுமதி  உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், தங்கம் இறக்குமதி  52.85 சதவீதம் சரிந்துள்ளது. கொரோனா பரவலால் தொழில்துறைகள் முடங்கியதை தொடர்ந்து, உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி  வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையி–்ல், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி சரிந்த போதும், சீனாவில் இருந்து கணிசமான  அளவு இறக்குமதி அதிகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஏற்றுமதி, இறக்குமதி  விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,740 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் ஏற்றுமதி 2,602 கோடி டாலராக  இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இது 5.27 சதவீத உயர்வாகும். இறக்குமதி 19.6 சதவீதம் சரிந்து, 3,031 கோடி டாலராக உள்ளது. இதன்மூலம்  வர்த்தகப் பற்றாக்குறை 291 கோடி டாலராக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தி–்ல் இந்தப் பற்றாக்குறை 1,167 கோடி டாலராக  இருந்தது.

 நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கான வர்த்தகப் பற்றாக்குறை 21.43 சதவீதம் சரிந்து 12,506 கோடி  டாலராக உள்ளது. இறக்குமதி -40.06 சதவீதம் சரிந்து, 14,869 கோடி டாலராக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதியை பொறுத்தவரை  இரும்புத்தாது  (109.52%), அரிசி (92.44%), புண்ணாக்கு (43.9%), கார்ப்பெட் (42.89%), மருந்து பொருட்கள் (24.36%), இறைச்சி மற்றும் பால் பொருட்கள்  (19.96%), பருத்தி நூல், துணிகள், ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள் (14.82%), புகையிலை (11.09%), நறுமணப் பொருட்கள் (10.07), பெட்ரோலிய  பொருட்கள் (4.17%), இன்ஜினியரிங் பொருட்கள் (3.73%), ரசாயனங்கள் (2.87%), காபி (0.79%) உயர்ந்துள்ளது.   இதுபோல், எண்ணெய் இறக்குமதி 35.92% சரிந்து 582 கோடி டாலராக உள்ளது. ஏப்ரல் - செப்டம்பர் காலக்கட்டத்தில் இது 51.14 சதவீதம் சரிந்து 3,185  கோடி டாலராக உள்ளது. எண்ணெய் அல்லாத பொருட்கள் இறக்குமதியும் 14.41 சதவீதம் சரிந்து 2,448 கோடி டாலராக உள்ளது. நடப்பு நிதியாண்டின்  முதல் 6 மாதங்களில் இது 36.12 % சரிந்து 11,683 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதி கடந்த செப்டம்பரில் 52.85 சதவீதம் சரிந்துள்ளது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும், இறக்குமதியை 19.6 சதவீதம் சரிந்துள்ளது. அதிகபட்சமாக தங்கம் இறக்குமதி 52.85 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.  சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து, பாதுகாப்பு கருதி  தற்காலிகமாக தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதன் எதிரொலியாக,  இந்தியாவிலும் நகைக்கடைகளில் தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்தது. மக்கள் ஏற்கெனவே பணத்தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்ததால்,  திருமணம் போன்ற அத்தியாவசிய தேவையை தவிர வேறு காரணங்களுக்காக தங்கம் வாங்குவதை தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : slump , Last month after a 6-month decline Exports up 5.27 per cent: Gold imports fell 52.85 per cent
× RELATED வெட்டுக்கிளியால் விலை கூடுமா? வத்தல்...