×

ஒழுகத்தூர், ஒடுகத்தூரானது சாலை, மருத்துவ வசதிக்கு ஏங்கும் 30 மலைக்கிராம மக்கள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் அமைந்துள்ளது ஒடுகத்தூர் பேரூராட்சி. ஒடுகத்தூர் கி.பி 11ம் நூற்றாண்டில் சப்தரிஷிகள் தவம் செய்த பகுதியாக இருந்துள்ளது. இப்பகுதி மக்கள் அடக்கம், அமைதி, ஆன்மிகம், போதனை, இறைவழிபாடு போன்ற ஒழுக்க நெறிகளில் சிறந்து விளங்கியுள்ளனர். சிறந்த ஒழுக்கத்தை மக்கள் கொண்டதால் இவ்வூரானது ஒழுகத்தூர் என அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஒழுகத்தூரானது, ஒடுகத்தூர் என்று மாறியதாக கூறுகின்றனர்.
11ம் நூற்றாண்டில் சப்தரிஷிகள் வழிபாட்டு தலமான சுயம்பு ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலானது உத்திரகாவேரி ஆற்றின் கிழக்கு புறத்தில் அமைந்துள்ளது. ஆற்றில் நீராடிவிட்டு கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக இருந்துள்ளது.
இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அதேபோல் சுயம்பு ஈஸ்வரர் கோயில் ஒடுகத்தூரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அகரம் கிராமத்தில் உள்ளது.
இப்பகுதியில் முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். இந்த கோயிலுக்கு சொந்தமாக சுமார் 300 ஏக்கர் நிலம் உள்ளது. கோயிலுக்கான இடத்தில் சுமார் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஒடுகத்தூர் பகுதியில் சுமார் 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த காலத்தில் மலைகளாக இருந்த மலைப்பகுதியை குடைந்து பல கிராமங்கள் உருவானதாக கூறுகின்றனர். இந்த கிராமங்களுக்கு அப்போது கழுதையின் மீது விவசாய பொருட்களை கொண்டு வந்து ஒடுகத்தூரில் தினச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் அதிகப்படியாக மரத்து புளி, சாமை, வரகு, கம்பு, கேழ்வரகு, நெல் மற்றும் தக்காளி பயிரிடப்பட்டு அதிக விற்பனை செய்து வந்துள்ளனர். தற்போது கொய்யா பழத்தின் பிறப்பிடமாக ஒடுகத்தூர் மாறியுள்ளது. இப்பகுதிமக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். விவசாய நிலத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. மாறாக 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுகின்றனர். இதனால் அனைத்து விவசாய மக்களும் விவசாயத்தை விட்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு செல்வதால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

1960ல் தினந்தோரும் விவசாய காய்கறிகளை 5 வேன் அளவிற்கு ஏற்றுமதியானது. இவை கொத்தாசாவடி மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக அமைந்திருந்ததாக கூறுகின்றனர். ஒடுகத்தூர் வேப்பங்குப்பம் ஏரி சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழைக்காலங்களில் மேல்அரசம்பட்டு, கொட்டாவூர் பகுதிகளில் மழை பெய்தால் ஏரி நிரம்பி வழியும். அதன்மூலம் 500 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும்.ஆனால் வேப்பங்குப்பம் ஏரி கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராமல் எவ்வளவு மழை பெய்தாலும் ஏரியில் நீர்நிரம்பாமல் வீணாகிறது. மேல் அரசம்பட்டில் தடுப்பணை கட்டினால் சுமார் 1,500 ஏக்கர் விவசாயி நிலம் பயன் பெறும். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள்  தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் சட்டமன்றத்தில் பேசி உள்ளார். இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒடுகத்தூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பீஞ்சமந்தை, கத்தியப்பட்டு, முள்வாடி உட்பட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலே விவசாயம் தான். இந்த கிராமங்களுக்கு முறையான சாலை வசதி, மருத்துவ வசதி, பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பஸ் வசதி செய்து, பஸ்நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இப்பகுதியில் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதியில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒடுகத்தூர் பகுதியில் ஆண்டுக்கு 500 டன் கொய்யா பழங்கள் விளைவதால் கொய்யா ஜூஸ் கம்பெனி அமைத்தால் ஆண், பெண் என்று இருவரும் வேலைவாய்ப்பு பெறுவர். தற்போது இந்த பழங்கள் பெங்களூர், கேரள மாநிலங்களுக்கு செல்கிறது.
தொழிற்சாலைகள் இல்லாததால் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இப்பகுதியில் கிராம இளைஞர்கள் அதிகளவில் இருப்பதால் அனைவருக்கும் முறையான உடற்பயிற்சி விளையாட்டு தளம்  அமைக்க பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  கோரிக்கை. ஒடுகத்தூர் பகுதியில் ஒரே ஒரு வங்கி மட்டுமே உள்ளது. 2 லட்சம் மக்களும் ஒரே வங்கியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அமைக்க வேண்டும். ஒடுகத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்பட்டால் மேல் சிகிச்சைக்காக சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேர அவசர சிகிச்சைப்பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒடுகத்தூர் பகுதியில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை மற்றும் பேரூராட்சி அலுவலகம் இருப்பதால் ஒடுக்கத்தூர் பேரூராட்சியை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Odugathur ,Olugathur ,hill villagers ,road ,facilities , Road, medical facility
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...