×

வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் போலீஸ் ஆதரவுடன் களமிறங்கிய கொள்ளை கும்பல்

* கண்காணிப்பு  கேமராக்கள், மின்விளக்குகள் உடைப்பு
* முகமூடி அணிந்து தொடர் கைவரிசையால் மக்கள் பீதி

வேலூர்: வேலூர் சேண்பாக்கத்தில் போலீஸ் ஆதரவுடன் முகாமிட்டுள்ள கொள்ளை கும்பல் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்விளக்குகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து வருவதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். வேலூர் சேண்பாக்கம், கருகம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மேம்பாலத்தின் கீழ் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களிடம் நகை பறிப்பு, செல்போன், பணம் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அதிகப்படியான கொள்ளை சம்பவங்கள் இரவு நேரத்தில் அரங்கேறினாலும், பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் குறைந்த நேரத்திலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகவேக பைக்குகளுடன் காத்திருக்கும் கொள்ளையர்கள், நகை அணிந்து செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று நகைபறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று பாதிக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டுமே புகார் அளிக்கின்றனர். பெரும்பாலானோர் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை. புகார் தெரிவிப்பவர்களுக்கும், ‘வழக்கு சம்பந்தமாக அடிக்கடி போலீஸ் நிலையத்துக்கும், கோர்ட்டுக்கும் வர வேண்டியிருக்கும்’ என்று கூறி போலீசார் அச்சுறுத்தும் வகையில் பேசுவதால் பலர் புகார் தெரிவிக்காமல் பின்வாங்கி விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த செயின் பறிப்பு சம்பவங்களால் 2 பெண்கள் மொபட்டில் இருந்து கீழே விழுந்து மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஓட்டேரியை சேர்ந்த வங்கி பெண் ஊழியர் 5 சவரன் செயினை பறிகொடுத்து, மண்டை உடைந்த நிலையிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் புகார் தெரிவிக்க மறுத்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்த போலீசார் மாமூல் வாங்கிக் ெகாண்டு அமைதியாகிவிடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதுதவிர வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் பட்டப்பகலில் வந்து கொண்டிருந்த, வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பல் செல்போன் பறித்தது. அவரிடம் புகார் வாங்குவதற்கும் போலீசார் அலைக்கழித்தார்களாம். இதுவரை செல்போன் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் விரிஞ்சிபுரம் உட்பட வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளிலும் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு முகமூடி கும்பல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அதிவேகமாக இயங்கக்கூடிய பைக்குகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏர் ஹாரன்கள் ெபாருத்தப்பட்டு, சைலன்சர்களின் சத்தம் அதிகரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. மேலும் கொள்ளை சம்பவங்களில் இளைஞர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சேண்பாக்கத்தில் போலீஸ் ஆதரவுடன் களமிறங்கி உள்ள கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துச்சென்றுவிட்டார்களாம். அதை போலீசாரே கண்டுகொள்ளவில்லை என்று குமுறுகின்றனர் அந்த பகுதி மக்கள். மேலும் தீவிரவாத தொடர்புடைய இந்த கொள்ளை கும்பல் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கி திசை திருப்பி வருகிறார்களாம். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம்  கேள்விக்குறியாகி வருகிறது. எனவே கொள்ளை சம்பவங்கள் தடுப்பதில் போலீசார்  அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் போதைக்கு அடிமையான பல இளைஞர்கள் முகமூடி அணிந்து கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலூர் அடுத்த ஊசூர், ஆற்காடு ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்த கொள்ளை கும்பல் சேர்ந்தவர்களை கத்தி, மிளகாய் பொடியுடன் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னணி விவரங்களை போலீசார் மூடி மறைக்காமல், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் கைவரிசை காட்டும் கொள்ளை கும்பல் வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்துக்கு அடியில்தான் இரவு நேரத்தில் முகாமிட்டிருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கொள்ளை அடிக்கும் நகை, பணம் அங்கேயே பங்கு பிரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே மேம்பாலத்துக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பிடுங்கி சென்றுள்ளனர். மேலும் மின்விளக்குகள் உடைக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கேமராக்களை மீண்டும் பொருத்தி தீவிரமாக கண்காணிக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Robbery gang ,Vellore Senpakkam , Robbery gang with police support at Vellore Senpakkam flyover
× RELATED வேலூர் சேண்பாக்கம் திரவுபதியம்மன்...