அயோத்தியை தொடர்ந்து மதுரா கிருஷ்ண ஜென்மபூமியை ஒப்படைக்க கோரி திடீர் வழக்கு: புதிய சர்ச்சையால் பரபரப்பு

மதுரா: அயோத்தியை போல் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் அவதரித்ததாக இந்துக்கள் நம்புகின்றர். இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த மாதம் அங்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். மேலும், இந்த இடத்தில் இருந்த பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதியை கட்டுவதற்காக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அயோத்தி அருகே 5 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு வழங்கியுள்ளது.இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில்தான் கிருஷ்ணர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. இதை அகற்றி விட்டு, இங்குள்ள 13.37 ஏக்கர் நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி மதுரா நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘

பகவான் ஸ்ரீகிருஷ்ணா விராஜ்மான்’ என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மதுராவில் உள்ள ஈத்கா மசூதி உள்ள நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும், இந்து பக்தர்களுக்கு புனிதமானது. எனவே, கிருஷ்ணர் பிறந்த ஜென்மபூமியை எங்களிடம் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். கி.பி 1658-1707 வரை அவுரங்கசீப் நாட்டை ஆண்டபோது, ஏராளமான பிறமத கோயில்களை இடிக்க உத்தரவிட்டார். கி.பி 1669-70ம் ஆண்டில் மதுராவின் கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் இடிக்கப்பட்டது. அவுரங்கசீப்பின் ராணுவத்தால் ஓரளவுக்கு மட்டுமே இக்கோயிலை இடிக்க முடிந்தது, மேலும், அங்கு மசூதியும் கட்டப்பட்டது,’ என கூறப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜ மூத்த தலைவர் வினய் கத்தியார் கூறுகையில், ‘‘அயோத்தி ராமஜென்ம பூமியை போல் மதுரா, காசியையும் விடுவிக்க வேண்டும். ஈத்கா ஆக்கிரமிப்பை அகற்றி கிருஷ்ணர் ஜென்மபூமியை மீட்க தனி இயக்கமும் தொடங்கப்படும்,” என்றார்.

Related Stories: