×

மக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது திமுக வெற்றிக்காக உடலை சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்டிப்பு

சென்னை: திமுக வெற்றிக்காக உடலை சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் மக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது என்று  கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற திமுக தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக  வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை  செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக் கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன். தமிழக மக்கள் ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.  நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திமுகவை சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய  காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.  அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திமுக தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச்  செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திருரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது திமுக வெற்றிக்காக உடலை சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Djaghagam ,G.K. ,Stalin ,Chennai ,BCE ,G.K. Stalin ,Djaghagam Government ,B.C. ,
× RELATED 200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு...