அதிமுக பிரமுகரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி 2வது நாளாக கிராம மக்கள் சாலை மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு

செய்யூர்: செய்யூர் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி, கிராம மக்கள் ஈசிஆர் சாலையில், 2வது நாளாக மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி கோழவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரசு (எ) ராமச்சந்திரன் (40). இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் துணை தலைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கடப்பாக்கத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அரசின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவரது இறப்பால் ஆத்திரமடைந்த அக்கிராமமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கொலைக்கு சம்பந்தமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரி ஈசிஆர் சாலை கடப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த சூனாம்பேடு காவல் ஆய்வாளர் தரணீஸ்வரி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலைக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததன்  பேரில் மறியலில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீசார் உறுதி அளித்ததைபோல், கொலையாளிகளை கைது செய்யாததால் அதிருப்தியடைந்த அக்கிராம பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மீண்டும் ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். மேலும், இவ்வழக்கு சம்பந்தமாக பாமக கட்சி நிர்வாகிகள் 2 பேரை சந்தேகத்தின்பேரில் சூனாம்பேடு போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு,  ஈ.சி.ஆர். பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: