மக்கள் அதிகளவில் பயணம் செய்யும் வழித்தடங்களில் இன்று முதல் காத்திருப்பு பயணிகளுக்காக 40 சிறப்பு கூடுதல் ரயில்கள்: 3 மணி நேரத்துக்கு முன்பே ஊர் சேரும்

புதுடெல்லி: மக்கள் அதிகளவில் பயணம் செய்யும் வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கும் பயணிகளுக்காக, நாடு முழுவதும் இன்று முதல் 40 சிறப்பு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, மே 1ம் தேதி முதல் வெளிமாநிலங்களில் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், கடந்த 12ம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், மக்கள் அதிகளவில் பயணம் செய்யும் வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கும் பயணிகளுக்காக, நாடு முழுவதும் இன்று முதல் 40 சிறப்பு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கும், இந்த வழித்தடங்களில் ஏற்கனவே வழக்கமாக இயக்கப்படும் ரயிலின் பெயர், எண்ணும் வழங்கப்படும், இந்த சிறப்பு கூடுதல் ரயில்கள் `குளோன் ரயில்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், மூன்றாம் வகுப்பு ஏசி வசதி கொண்ட ரயில்களை மட்டுமே குளோன் ரயில்களாக இயக்க ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இந்த ரயில்கள் வழக்கமாக செல்லும் ரயில்களை விட சற்று முன்னதாக புறப்பட்டு, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே சேருமிடத்தை சென்றடையும். இந்த ரயில்கள் அதிக வேகத்துடனும், ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்வதால் பயண நேரம் குறைகிறது.

Related Stories:

>