×

உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவு சுற்றுலாத்தலமாக மாறும் சங்ககிரி மலைக்கோட்டை- தொல்லியல் துறை ஆய்வால் மகிழ்ச்சி

சேலம் : சேலத்தில் பிரசித்தி  பெற்ற சங்ககிரி மலைக்கோட்டையை சுற்றுலாத் தலமாக்குவதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது அப்பகுதி மக்கள், வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பழங்கால  கோட்டைகள் உள்ளன. இதில் சங்குவடிவம் கொண்ட மலையில் அமைந்திருக்கும் சங்ககிரி கோட்டை மிகவும் பிரசித்தி  பெற்றது.

விஜயநகர அரசர்களால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டைக்கு, தமிழகத்தின் மிகப்பெரிய கோட்டை என்ற பெருமை உள்ளது. அதோடு சுதந்திரப்போராட்ட வீரர், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட கோட்டை என்பதால் பெரும் வரலாற்று சிறப்பு கொண்டதாகவும் விளங்குகிறது. அடிவாரத்தில் இருந்து உச்சிவரை கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளது.இதில் ஒவ்வொரு வாயில்களை கடக்கும் போதும் கீழ் அரணில் சிவன் கோயில், சென்னகேசவப் பெருமாள் கோயில், தஸ்தகீர் மகான்தர்க்கா, கெய்த்பீர் மசூதி, தானிய கிடங்குகள், தர்பார் மண்டபங்கள், ஆயுத கிடங்குகள், நீர்சேமிப்பு பாலிகள், நுண்ணிய கலைச்சிற்பங்கள் என்று பழங்கால பொக்கிஷங்கள் அனைத்தும் விழிகளை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கோட்டை, பராமரிப்பின்றி முட்புதர்கள் முளைத்து கருவேலம் காடாக மாறி வருகிறது. நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த அற்புத கோட்டையை பாதுகாத்து, சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோட்டையை தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்திருப்பது, அப்பகுதி மக்களிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சேலம் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டைகள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகையில் சங்ககிரி கோட்டையிலும் ஆய்வு நடந்துள்ளது. கோட்டை அமைந்திருக்கும் இடத்தை சுற்றியுள்ள உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், தற்போதைய அவற்றின் நிலை, மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் என்று அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை தொல்லியல் துறை உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது சுற்றுலாத் தலமாக மாற்றப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவும் இருக்கலாம்,’’ என்றனர்.

சேலம் வரலாற்று ஆர்வலர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பல மாநிலங்களில் சிறிய கோட்டைகளை கூட, அருமையாக பராமரித்து அதன் சிறப்புகளை உணரச் செய்துள்ளனர். அதே நேரத்தில் வரலாற்று ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், இயற்கை எழில், கலைநுட்ப ரீதியாகவும் சிறந்து விளங்கும் இந்த கோட்டையை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. தற்போது தொல்லியல் துறையினரும், சுற்றுலாத் துறையினரும் ஆய்வு செய்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சங்ககிரி கோட்டையை பராமரித்து சில கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், இது தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும்,’’ என்றனர்.


Tags : Salem: The authorities have inspected the famous Sankagiri hill fort in Salem to make it a tourist destination.
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்