×

அருணாச்சல பிரதேச எல்லையில் 90,000 சதுர கி.மீ. இந்திய பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது: மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்!!

டெல்லி : லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் பாதுகாக்க 20 இந்திய ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் மகத்தானது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லைப் பிரச்சனை குறித்தும் ,எல்லையில் சீன ஊடுருவல் குறித்தும் மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் 19 ராணுவ வீரர்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்கும் முயற்சியில் துணிச்சலான உயர்ந்த தியாகத்தை செய்துள்ளதாக தெரிவித்தார்.

நமது படை வீரர்களின் மன உறுதியை மேலும் அதிகரிப்பதற்காக பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு நேரில் சென்று ராணுவ வீரர்களை ஊக்குவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றும் லடாக் பிராந்தியத்தில் மட்டும் சீன சுமார் 38,000 சதுர கிமீ இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சீனா, பாகிஸ்தான் எல்லைப் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சுமார் 5,180 சதுர கிமீ இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனாவுக்கு வழங்கி இருப்பதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேச எல்லையின் கிழக்கு பகுதியில் 90,000 சதுர கிமீ இந்திய பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே இந்தியா விரும்புவதாகவும் எல்லையை வரைமுறை செய்வது குறித்து 2 நாடுகளும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தற்போது சூழ்நிலையில், விவரிக்க முடியாத சில உணர்வுப் பூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் இருப்பதாகவும் இதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளும் என்றும் தாம் நம்புவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 


Tags : border ,Arunachal Pradesh ,Indian ,China ,Rajnath Singh , Arunachal Pradesh, Border, Indian Territory, China, States, Rajnath Singh, Description
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...